ஐஸ் ஹாக்கி தொடரின் கிழக்கு பிராந்திய இறுதிப்போட்டிகளைப் பொது அரங்குகளில் பெரிய திரைகளில் காண்பதற்கு தேசிய ஹொக்கி லீக் (NHL) அமைப்பு விதித்துள்ள தடைக்கு எதிராகக் கியூபெக் சட்டப் பேரவையில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தக் கண்டனத் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொன்றியல் கனடியன்ஸ் (Montreal Canadiens) அணியின் பிளே-ஆஃப் போட்டிகளை காட்டினோ (Gatineau) நகர மக்கள் பொது அரங்கில் ஒன்று கூடிப் பார்ப்பதற்கான உரிமையை, தேசிய ஹொக்கி லீக் (NHL) அமைப்பு உடனடியாக வழங்க வேண்டும் என இத்தீர்மானம் வலியுறுத்துகிறது. கடந்த வாரம் காட்டினோ நகரின் ஸ்லஷ் பப்பி சென்டர் (Slush Puppie Centre) அரங்கில் 4,000 ரசிகர்கள் பங்கேற்கவிருந்த பாரிய திரையிடல் நிகழ்வை, தேசிய ஹொக்கி லீக் (NHL) அமைப்பு திடீரென முடக்கியிருந்தது. வர்த்தக எல்லை விதிகளைக் காரணம் காட்டியே, இந்தத் திரையிடல் நிகழ்வினை தேசிய ஹொக்கி லீக் (NHL) அமைப்பு நிறுத்தியது. பிரான்ஸ் மொழித் தொலைக்காட்சியான டிவிஏ ஸ்போர்ட்ஸ் (TVA Sports) அமைப்பிடம் இருந்து உத்தியோகபூர்வமாக ஒளிபரப்பு உரிமையைப் பெற்ற பின்னரே காட்டினோ நகர அமைப்பாளர்கள் இந்தத் திரையிடலை ஏற்பாடு செய்திருந்தனர்.
எனினும், டிக்கெட் விற்பனை தொடங்கிய சில நிமிடங்களிலேயே தலையிட்ட தேசிய ஹொக்கி லீக்& (NHL) அமைப்பு, இந்தத் திரையிடலை ரத்து செய்தது. இதனைத் தொடர்ந்தே, கியூபெக் மாகாண அரசியல் மட்டத்தில், தேசிய ஹொக்கி லீக் (NHL) அமைப்பினை இலக்குவைத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
