கியூபெக் மாகாணத்தில் உள்ள லவால் (Laval) நகரில் இரண்டு ஆங்கில மொழிப் பள்ளிகளை மூடுவது தொடர்பான திட்டம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
பெற்றோர்கள் மற்றும் கல்விச் சமூகத்தினரிடமிருந்து எழுந்த தொடர்ச்சியான எதிர்ப்புகளைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சர் வில்பிரெட் லாரியர் கல்வி வாரியம் (Sir Wilfrid Laurier School Board) வெளியிட்டுள்ள தகவலின்படி, ‘அவர் லேடி ஆஃப் பீஸ்’ (Our Lady of Peace) தொடக்கப் பள்ளி மற்றும் ‘பீனிக்ஸ் மாற்றுப் பள்ளி’ (Phoenix Alternative School) ஆகியவற்றை மூடுவது தொடர்பான ஆலோசனைக் கூட்டங்கள் தற்காலிகமாக ரத்துச் செய்யப்பட்டுள்ளன.
மேலும், அவர் லேடி ஆஃப் பீஸ், ட்வின் ஓக்ஸ் (Twin Oaks) மற்றும் கிரெஸ்ட்வியூ (Twin Oaks) ஆகிய தொடக்கப் பள்ளிகளின் மாணவர் சேர்க்கை எல்லைகளில் மாற்றங்களைச் செய்யும் திட்டமும் கைவிடப்பட்டுள்ளது.
எனினும், ‘சிடிசி விமாண்ட்’ (CDC Vimont) வயதுவந்தோர் கல்வி மையம் மற்றும் பீனிக்ஸ் மாற்றுப் பள்ளியை வேறு இடத்திற்கு மாற்றுவது தொடர்பான ஆலோசனைகள் மட்டும் தொடர்ந்து நடைபெறும் என்று கல்வி வாரியத்தின் தகவல்தொடர்பாளர் மாக்சீன் ஜோலின் (Maxeen Jolin) தெரிவித்துள்ளார்.
பீனிக்ஸ் மாற்றுப் பள்ளியானது 2027-28 கல்வி ஆண்டு முழுவதும் தற்போதைய நிலையிலேயே இயங்கும் என்றும், அதன் எதிர்கால இடமாற்றம் குறித்த இறுதி முடிவு இதுவரை எட்டப்படவில்லை என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
