கியூபெக் மாகாணத்தில் உள்ள பே-சென்ட்-போல் (Baie-Saint-Paul) பகுதியில் நிகழ்ந்த நபர் ஒருவரின் கொலையுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் வழக்கில், 60 வயது நபர் ஒருவரை மாகாணக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கியூபெக் நகர் பகுதியைச் சேர்ந்த குறித்த நபர் கைது செய்யப்பட்டதாகக் கியூபெக் மாகாணக் காவல்துறையான ‘சூரே து கியூபெக்’ (Sûreté du Québec) உறுதிப்படுத்தியுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (11.10.2026) மாலை 7:15 மணியளவில், பே-சென்ட்-போல் பகுதியில் உள்ள ரங் டி சென்ட்-பிளாசிட் சுத் (Rang de St-Placide Sud) வீதியில் அமைந்துள்ள குடியிருப்பு ஒன்றில் 49 வயது மதிக்கத்தக்க நபர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டார்.
உடனடியாக அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
வெளியிடப்பட்ட அறிக்கையில், இச்சம்பவம் ஒரு கொலை என காவல்துறையினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தீவிர தேடுதல் நடவடிக்கையின் போதே, சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
