மொன்றியல் நகரில் உள்ள புகழ்பெற்ற மெக்கில் பல்கலைக்கழகத்தின் (McGill University) பழங்குடி மொழி புத்துயிர்ப்பு (Indigenous Language Revitalization) குறித்த சிறப்பு முனைவர் பட்டப் படிப்பை, அக்வேசாஸ்னே மொஹாக் (Akwesasne Mohawk) பிரதேசத்தைச் சேர்ந்த 73 வயது மூதாட்டியான மேரி ஓன்வா:ரி டெகஹாவாக்வென் மெக்டொனால்டு (Mary Onwá:ri Tekahawá:khwen McDonald) வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார்.
இப்பிரிவில் முனைவர் பட்டம் பெறும் முதல் நபர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
பழங்குடி இனமான கானியெகேஹாகா (Kanien’kehá:ka) சமூகத்தைச் சேர்ந்த மேரி, மெக்கில் பல்கலைக்கழகத்தின் இலையுதிர் காலப் பட்டமளிப்பு விழாவில் தனது பட்டத்தைப் பெற்றார்.
மெக்கில் பல்கலைக்கழகத்திற்கு அவர் சமர்ப்பித்த ஆய்வறிக்கை, அவரது தாய்மொழி அறிவையும், வகுப்பறைகளில் மாணவராகவும் ஆசிரியராகவும் அவர் பெற்ற நீண்ட கால அனுபவங்களையும் அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
மொன்றியல் நகரில் உள்ள மெக்கில் பல்கலைக்கழகத்தில் தாம் ‘மூத்த குடியுரிமை வழிகாட்டியாக’ (elder in residence) தொடர்ந்து சேவையாற்றவுள்ளதாகவும், பழங்குடி மொழிக்கான ஆய்வகத்தை உருவாக்குவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் மேரி தெரிவித்துள்ளார்.
