கியூபெக் மாகாணத்தில் செயற்படும் பெரிய அளவிலான தரவு மையங்களுக்கான (Data Centres) மின்சாரக் கட்டணத்தை இரண்டு மடங்காக உயர்த்தும் தனது நிலைப்பாட்டில் தொடர்ந்தும் உறுதியாக இருப்பதாக ‘ஹைட்ரோ-கியூபெக்’ (Hydro-Québec) மின்சார நிறுவனம் அறிவித்துள்ளது.
5 மெகாவாட்டிற்கு மேற்பட்ட மின்சாரத்தைப் பயன்படுத்தும் தரவு மையங்களுக்கு, கிலோவாட்-மணி நேரத்திற்கு சராசரியாக 13 சென்ட் கட்டணமாக வசூலிக்கப்பட வேண்டும் என, கியூபெக் மாகாணத்தின் எரிசக்தி ஒழுங்குமுறை ஆணையத்திடம் (Régie de l’énergie) அந்த நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தற்போது நடைமுறையில் உள்ள கட்டணத்தை விட கிட்டத்தட்ட இரு மடங்காகும்.
தரவு மையங்களின் மின்சாரத் தேவையைக் கட்டுப்படுத்தவும், சாதாரண மின் நுகர்வோர் மீது கூடுதல் நிதிச் சுமை ஏற்படுவதைத் தவிர்க்கவும் இந்த விலை உயர்வு அவசியமானது என ஹைட்ரோ-கெபெக் தரப்பு தெரிவித்துள்ளது.
கியூபெக் மாகாணத்தின் அனைத்து மின் நுகர்வோரின் நலன்களையும் பாதுகாக்கும் வகையிலேயே இந்தக் கட்டணத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் பேச்சாளர் சென்ட்ரிக் பௌச்சார்ட் (Cendrix Bouchard) தெரிவித்தார்.
முன்னதாக, இந்த மின்கட்டண உயர்வை ஆதரித்து கியூபெக் அரசாங்கம் வெளியிட்டிருந்த சில நிர்வாக உத்தரவுகளை நீதிமன்றம் ரத்து செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
எனினும், எரிசக்தி வளங்கள் தொடர்பான சட்டங்களின் கீழ், அரசாங்கம் தனது பொருளாதார மற்றும் சமூகக் கருத்துக்களை ஒழுங்குமுறை ஆணையத்திற்குத் தெரிவிக்கலாம் என்பதால், புதிய கட்டணத் திட்டம் குறித்த விசாரணைகள் தொடர்கின்றன.
இதேவேளை, இந்தக் கட்டண உயர்வுத் திட்டத்திற்குத் தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் (Google) உள்ளிட்ட தரப்புகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.
கியூபெக் மாகாணத்தில் உள்ள பியூஹார்னுவா (Beauharnois) பகுதியில் கூகுள் நிறுவனம் தனது தரவு மையத்தைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

