கியூபெக் மாகாணத்தில் ஹாலோவீன் (Halloween) பண்டிகையின் போது சிறுவர்கள் சேகரித்த மிட்டாய்களில் ஊசிகள் மற்றும் முட்கள் கண்டறியப்பட்டுள்ள சம்பவம் பெற்றோரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து, மிட்டாய்களை முழுமையாகச் பரிசோதிக்குமாறு கியூபெக் மாகாணக் காவல் துறையினர் (SQ) கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கியூபெக் மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் குழந்தைகள் சேகரித்து வந்த சொக்லேட்டுகள் மற்றும் மிட்டாய்களில் ஆபத்தான முறையில் உலோக ஊசிகள் மற்றும் முட்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாகப் புகார்கள் பதிவாகியுள்ளன.
ட்ரமண்ட்வில் (Drummondville) பகுதியில், தாங்கள் சேகரித்த சிறிய சாக்லேட்டுகளுக்குள் ஊசிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக இரண்டு வெவ்வேறு குடும்பங்கள் காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளதாக கியூபெக் மாகாணக் காவல் துறை பேச்சாளர் லூயிஸ்-பிலிப் ரூவல் (Louis-Philippe Ruel) தெரிவித்தார்.
இதேபோல், சொடியர்-அப்பலாச் (Chaudière-Appalaches) பிராந்தியத்தில் உள்ள செயின்ட்-மார்செல் (Saint-Marcel) பகுதியில் மற்றொரு மிட்டாய்க்குள் உலோக முள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மேலும், காட்டிநோ (Gatineau) பகுதியிலும் சிறுவர்கள் சேகரித்த ஜெல்லி மிட்டாய் (gummies) பைக்குள் ஊசி செருகப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டு, அதுகுறித்த தீவிர விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
இதுவரை இந்தச் சம்பவங்களால் யாருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்தச் சம்பவங்களை அடுத்து, கியூபெக் மாகாணத்தின் பெற்றோர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என காவல் துறை தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
