மொன்றியல் நகரில் இனவெறி மற்றும் முறையற்ற நடத்தை தொடர்பான புகார்களின் அடிப்படையில், மாநகரப் பெருநகரக் காவல் துறையைச் சேர்ந்த 7 காவல் அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
காவல் துறை வரலாற்றில் இதுவொரு முன்னோடியான மற்றும் மிகக் கடுமையான நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.
மொன்றியல் காவல் துறை தலைமை அதிகாரி ஃபாடி தாகேர், இந்த அதிரடி பணிநீக்க அறிவிப்பை வெளியிட்டார்.
மொன்றியல் டவுன்டவுன் பகுதியில் அமைந்துள்ள 21ஆவது காவல் நிலையத்தைச் சேர்ந்த இரு அதிகாரிகளும், மொன்றியல் நார்த் பகுதியில் அமைந்துள்ள 39ஆவது காவல் நிலையத்தைச் சேர்ந்த ஐந்து அதிகாரிகளுமே இவ்வாறு நிர்வாக ரீதியாகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
தவறான மற்றும் அவமரியாதையான செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் புகார்களைத் தொடர்ந்து, இந்த அதிகாரிகளிடம் இருந்த துப்பாக்கிகள் மீளப்பெறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
