மொன்றியல் பெருநகருக்கு உட்பட்ட தேர்தல் தொகுதியான லாரியர் – செயின்ட்-மரியில் (Laurier–Sainte-Marie) நடைபெறவுள்ளதும் நாடாளுமன்ற ஆசனத்துக்கானதுமான இடைத்தேர்தலில், லிபரல் கட்சி சார்பில், டெஜார்டின்ஸ் (Desjardins) குழுமத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கய் கோர்மியர் (Guy Cormier) போட்டியிடுவதாக, லிபரல் கட்சி அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
வெளியிடப்பட்ட கட்சி அறிக்கையின் மூலம் இந்தத் தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஓகஸ்ட் மாதம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த முன்னாள் அமைச்சர் ஸ்டீவன் கில்பியூட்டின் (Steven Guilbeault) ஆசனம் வெற்றிடமாகியுள்ள நிலையில், அதனை நிரப்புவதற்காகவே இந்த இடைத்தேர்தல் நடத்தப்படுகின்றது.
லாரியர் – செயின்ட்-மரி தொகுதி உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில், மொத்தமாக ஆறு இடைத்தேர்தல்கள் நடைபெறவுள்ளன.
இந்த நிலையில், இவற்றுக்கான வாக்குப்பதிவு எதிர்வரும் டிசம்பர் மாதம் 7 ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மொன்றியல் பெருநகருக்கு உட்பட்ட தேர்தல் தொகுதியான லாரியர் – செயின்ட்-மரியில் போட்டியிடுவது குறித்துப் பேசிய கய் கோர்மியர், ”மக்களின் வாழ்க்கைத் தரத்தைச் சுமையின்றி மாற்றுவது, அதிகமான வீடுகளை உருவாக்குவது, மற்றும் தொழிலாளர்கள் மற்றும் சிறு வணிகங்களைப் பாதுகாப்பது போன்றவையே தனது முக்கிய இலக்குகள்” எனத் தெரிவித்தார்.
