கியூபெக், அல்பெர்ட்டா மற்றும் சாஸ்காட்செவன் முதலான மாகாணங்கள் கனடாவை விட்டுப் பிரிந்து செல்ல வேண்டும் என, உலகின் முன்னணி தொழிலதிபரான இலான் மாஸ்க் தெரிவித்த கருத்துக்களுக்கு, பிரதமர் மார்க் கார்னி கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
கியூபெக் மாகாணத்தில் அண்மையில் நடைபெற்ற தேர்தலில் பிரிவினைவாதக் கொள்கையைக் கொண்ட ‘பார்ட்டி கியூபெக்குவா’ (Parti Québécois) கட்சி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, எக்ஸ் (X) சமூக வலைத்தளத்தில் பதிவொன்றை வெளியிட்ட இலான் மாஸ்க், “கியூபெக் கனடாவிலிருந்து பிரிந்து செல்வதே நல்லது. அதேபோல அல்பெர்ட்டா மற்றும் சாஸ்காட்செவன் ஆகிய மாகாணங்களும் தனித்தனியாகப் பிரிய வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதற்குப் பதிலளித்த பிரதமர் மார்க் கார்னி “கனடாவின் எதிர்காலம் மற்றும் கொள்கைகள் தொடர்பில் அந்நாட்டு மக்களே முடிவெடுப்பார்கள்” என்றும், ”வெளிநாட்டு அரசாங்கங்களோ அல்லது பெருநிறுவனங்களோ இதில் தலையிட முடியாது” என்றும் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
கியூபெக்கில் வெற்றி பெற்ற பார்ட்டி கியூபெக்குவா கட்சிக்கு மக்கள் மத்தியில் சுமார் 28 சதவீத ஆதரவே கிடைத்துள்ளது. அத்துடன், கியூபெக்கில் பிரிவினைவாதத்திற்கு ஒட்டுமொத்தமாக சுமார் 30 சதவீத அளவிலான ஆதரவே நிலவுவதாக அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதேவேளை, அல்பெர்ட்டா மாகாணத்தில் கனடாவுடன் தொடர்ந்து நீடிப்பதா அல்லது பிரிந்து செல்வது குறித்து வாக்கெடுப்பு நடத்துவதா என்பது தொடர்பில் இம்மாதம் 19 ஆம் திகதி அன்று வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.
கனடாவுடனேயே இணைந்து இருக்கும் தரப்புக்கு ஆதரவாகவே தாம் வாக்களிக்கப் போவதாக அல்பெர்ட்டா மாகாண முதல்வர் டேனியல் ஸ்மித் அறிவித்துள்ளார்.
இந்த நிலையிலேயே, இலான் மாஸ்க்கின் பிரிவினைக்கு ஆதரவான கருத்து வெளிப்படுத்தப் பட்டிருந்தமை குறிப்பிடத் தக்கது.

