கியூபெக் மாகாணத்தில் உள்ள பிரபல ‘நோர்டிக் ஸ்பா’ (Nordik Spa Village) நிறுவனத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாலியல் துஷ்பிரயோகச் சம்பவங்கள் தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்ட கூட்டு நஷ்டஈட்டு வழக்கு (Class Action) தொடர்பில், விசாரணை நடத்துவதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
கடந்த 19 வருட காலத்தில் அங்கு பணியாற்றிய 36 மசாஜ் சிகிச்சை அளிப்பாளர்களால் 143 பேர் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டுள்ளதாகப் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒட்டாவா மற்றும் கெட்டினோ பிராந்தியத்திற்கு வடக்கே செல்சி (Chelsea) பகுதியில் அமைந்துள்ள இந்த பிரபல ஸ்பா மையத்திற்கு எதிராக, கியூபெக் மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்கள் அளித்த புகார்களை நிர்வாகம் உரிய முறையில் கையாளத் தவறியதுடன், அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தத் தவறிவிட்டதாகவும் வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் ஆஜராகும் ‘லம்பேர்ட் அவோகேட்ஸ்’ (Lambert Avocats) சட்டத்தரணிகள் குழு, கடந்த ஆண்டில் மட்டும் 143 பேர் தம்மைத் தொடர்புகொண்டு குறித்த ஸ்பாவில் தமக்கு நேர்ந்த பாலியல் அத்துமீறல்கள் குறித்துத் தெரிவித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
2007 ஆம் ஆண்டு முதல் 2026 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இந்தச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மேலும், பாலியல் துன்புறுத்தல் குறித்து ஸ்பா நிர்வாகத்திடம் முறையிட்ட சில வாடிக்கையாளர்களுக்கு, “பாதிப்பு ஏற்பட்ட அதே இடத்திற்கு மீண்டும் வருமாறு” அன்பளிப்பு அட்டைகள் (Gift cards) வழங்கப்பட்டதாக நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இடம்பெற்ற முதன்மைச் சம்பவமொன்றை அடிப்படையாக வைத்தே இந்த கூட்டு வழக்கு முன்னெடுக்கப்படுகிறது.
இதேவேளை, தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு நீதிமன்றத்தில் சட்டரீதியாகப் பதிலளிக்கவுள்ளதாக நோர்டிக் ஸ்பா நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத் தக்கது.

