கியூபெக் (Quebec) மாகாணத் தேர்தலில் தனிநாட்டுக் கொள்கையைக் கொண்ட பார்ட்டி கியூபெக்வா (Parti Québécois) கட்சி வெற்றி பெற்றுள்ளதைத் தொடர்ந்து, அல்பெர்ட்டா (Alberta) மாகாணத்தைப் பிரிக்கக் கோரும் தனிநாடு ஆதரவாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
கியூபெக்கின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்கவுள்ள போல் செயிண்ட்-பியர் பிளமண்டனை (Paul St-Pierre Plamondon) தங்கள் முக்கிய பங்காளராகக் கருதுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
திங்கட்கிழமை நடைபெற்ற கியூபெக் மாகாணத் தேர்தலில், ஆளும் அதிகாரத்தை பல ஆண்டுகளாகத் தம்வசம் வைத்திருந்த ”கூலிஷன் அவெனிர் கியூபெக் (CAQ)” கட்சி பாரிய தோல்வியை அடைந்தது.
அதனைத் தொடர்ந்து, தனிநாடு கோரும் பார்ட்டி கியூபெக்வா கட்சி சிறுபான்மை அரசாங்கத்தை அமைக்கவுள்ளது.
கியூபெக்கின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்கவுள்ளவரும் பார்ட்டி கியூபெக்வா கட்சியின் தலைவருமான போல் செயிண்ட்-பியர் பிளமண்டன், அல்பெர்ட்டா மாகாணம் கனடாவிலிருந்து பிரிவது தொடர்பான வாக்கெடுப்பை நடாத்தி தனிநாடாகப் பிரியத் தீர்மானித்தால், அதனைத் தனது அரசாங்கம் அங்கீகரிக்கும் என ஏற்கனவே உறுதியளித்திருந்தார்.
இந்த நிலையில், பார்ட்டி கியூபெக்வா கட்சியின் இந்த வெற்றி குறித்துக் கருத்து தெரிவித்துள்ள ‘அல்பெர்ட்டா செழிப்புத் திட்டத்தின்’ (Alberta Prosperity Project) முக்கிய நிர்வகியாக விளங்கும் சட்டத்தரணி ஜெப்ரி ராத் (Jeffrey Rath), “கனடிய வரலாற்றில் முதல்முறையாக அல்பெர்ட்டாவின் சுதந்திரப் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் அரசாங்கம் ஒன்று கியூபெக்கில் அமைந்துள்ளது.” என்று குறிப்பிட்டுள்ளார்.
”இது நாட்டின் அரசியல் இயக்கவியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
”அல்பெர்ட்டா மாகாணம் கனடாவிலேயே தொடர்வதா அல்லது விலகுவதா என்பது தொடர்பில் வாக்கெடுப்பு ஒன்றை நடத்துவதா?” என்ற வினாவுக்கான மக்கள் கருத்தை அறியும் முதற்கட்ட வாக்கெடுப்பு, எதிர் வரும் 19 ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

