அமெரிக்காவுடன் பாதுகாப்பு மற்றும் இராணுவ ஒத்துழைப்பில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக வெளியாகியுள்ள தகவல்களுக்கு மத்தியில், கனடா தனது வழமையான பாதுகாப்பு ஒத்துழைப்பைத் தொடர்ந்து முன்னெடுத்து வருவதாக கனடாவின் பாதுகாப்பு அமைச்சர் டேவிட் மெக்கின்டி தெரிவித்துள்ளார்.
அமெரிக்கப் போர்த் துறைச் செயலாளர் பீட் ஹெக்செத் வெளியிட்டுள்ளதாகக் கூறப்படும் உள்நாட்டு இரகசியக் குறிப்பில், கனடா மற்றும் அமெரிக்கா இடையிலான பாதுகாப்பு உறவுகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது
இது கனடாவுக்கு அவமதிப்பாக அமையும் நடவடிக்கையாக இருக்கலாம் என்றும், இரு நாடுகளின் இராணுவங்களுக்கு இடையிலான தொடர்புகள் எவ்வாறு கட்டுப்படுத்தப்படும் என்ற கேள்விகளை எழுப்புவதாகவும் அமெரிக்க அதிகாரி ஒருவர் அந்த ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.
எனினும், குறித்த இரகசிய ஆவணத்தைத் தாம் இதுவரை பார்வையிடவில்லை என்றும், அதன் உள்ளடக்கங்கள் தொடர்பில் தமக்கு எதுவும் தெரியாது என்றும் பாதுகாப்பு அமைச்சர் டேவிட் மெக்கின்டி குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, கனடா மற்றும் அமெரிக்கா இடையிலான பாதுகாப்பு, உளவுத்துறை மற்றும் புலனாய்வுத் தகவல் பரிமாற்ற ஒத்துழைப்புகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.
இதற்கிடையில், அமெரிக்கப் பாதுகாப்புத் துறை கனடாவுடனான பாதுகாப்பு உறவுகளை மறுசீரமைத்து, அமெரிக்காவின் பாதுகாப்பு இலக்குகளுக்கு நேரடியாகப் பயனளிக்கும் நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளித்து வருவதாக பென்டகன் பேச்சாளர் சீன் பார்னெல் தெரிவித்துள்ளார்.
எனினும், இந்தப் புதிய உத்தரவினால் இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு உளவுத்துறை ஒத்துழைப்பு, வட அமெரிக்க வான்வெளிப் பாதுகாப்புக்கான NORAD கூட்டமைப்பு மற்றும் நேட்டோ அமைப்பின் ஊடான ஒத்துழைப்புகள் பாதிக்கப்படாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவின் இந்தப் புதிய நடவடிக்கை கனடா – அமெரிக்கா இடையிலான இராணுவ உறவுகளில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தும் என்பது பேசு பொருளாக மாறியுள்ளது
