மொன்றியல் தீவில் அமைந்துள்ள கோட் சென்-லூக் (Côte Saint-Luc) நகரில், பொதுப் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் வாகனங்களின் இலக்கத் தகடுகளை (Licence plate) தானியங்கி முறையில் வாசித்து பதிவு செய்யும் புதிய கமரா தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நகரத்தின் கவனடிஷ் புலிவார்ட் (Cavendish Boulevard) சுரங்கப்பாதையில் இந்த புதிய சோதனைத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக, நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஓராண்டுக்கு முன்னர் ஏற்றுக்கொள்ளப்பட்ட மூலோபாயத் திட்டத்தின் ஒரு பகுதியாகவே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த அமைப்பின் கீழ், சுரங்கப்பாதை வழியே இரு திசைகளிலும் பயணிக்கும் வாகனங்களின் இலக்கத் தகடுகள் கமராக்கள் மூலம் படம் பிடிக்கப்படும்.
அத்துடன், வாகனம் குறித்த இடத்தைக் கடந்து சென்ற திகதி, நேரம் மற்றும் இடம் ஆகிய விபரங்களும் பதிவு செய்யப்படும்.
அங்கீகரிக்கப்பட்ட குற்றவியல் விசாரணைப் பட்டியலில் உள்ள வாகனங்கள், காணாமல் போனவர்கள் தொடர்பான தகவல்கள், திருடப்பட்ட வாகனங்கள் அல்லது ஆம்பர் எச்சரிக்கை (Amber Alert) விடுக்கப்பட்ட வாகனங்கள் முதலானவை இந்த கமெராவின் பார்வை எல்லைக்குள் நுழையும் போது, இக்கமரா அந்த வாகனங்களை அடையாளம் காணும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அந்த வாகனங்களைப் பற்றிய தகவல்களை பாதுகாப்பு அதிகாரிகளுக்கு உடனடியாக அளித்து, எச்சரிக்கை வழங்கும் வகையில், இந்த கமெராவின் செயற்றொகுதி அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் கமராக்கள் மூலம் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்படாது எனவும், வேகக் கட்டுப்பாடு அல்லது வாகனப் பதிவுச் சான்றிதழ்களைச் சரிபார்க்க இவை பயன்படுத்தப்படாது எனவும் நகர நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது.

