அமெரிக்காவின் பிரபல பழ உற்பத்தி நிறுவனமான டிரிஸ்கோல்ஸ் (Driscoll’s) க்கு எதிராக, இழப்பீடு கோரும் கூட்டு வழக்குக்கு (Class-action lawsuit) அனுமதி வழங்குமாறு கியூபெக் உயர் நீதிமன்றத்திடம் சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அந்த நிறுவனம் ஆனது கனடாவுக்கு ஏற்றுமதி செய்த பழங்களில், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகளவில் பூச்சிக்கொல்லி எச்சங்கள் காணப்பட்டதாகக் கூறி, அந்நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்வதற்கான அனுமதி கோரப்பட்டுள்ளது.
கடந்த 2022 முதல் 2024 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில், பல மில்லியன் பவுண்டுகள் எடையுள்ள ஸ்ட்ராபெரி, ரஸ்ப்பெரி, புளூபெரி மற்றும் பிளாக்பெரி உள்ளிட்ட பழங்களை டிரிஸ்கோல்ஸ் நிறுவனம் கனடாவிற்கு அனுப்பியுள்ளது.
இந்த பழங்களில் கனடாவின் உணவுப் பாதுகாப்பு விதிமுறைகளின்படி அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகளவில் ரசாயன மற்றும் பூச்சிக்கொல்லி எஞ்சிய எச்சங்கள் காணப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
கியூபெக் மாகாணத்தைச் சேர்ந்த நுகர்வோர் ஒருவர் சார்பில் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கனடாவில் அனுமதிக்கப்பட்ட பூச்சிக்கொல்லி அளவுகளை விட அதிக ரசாயனம் கலந்துள்ள விபரங்களை நுகர்வோருக்குத் தெரிவிக்க அந்த அமெரிக்க நிறுவனம் தவறிவிட்டதாகவும், இது நுகர்வோரைத் தவறாக வழிநடத்தும் செயலாகும் என்றும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
முன்னதாக, டிரிஸ்கோல்ஸ் நிறுவனத்தின் முன்னாள் ஊழியரான டேவிட் ஹராடா என்பவர், கனடாவிற்கு அனுப்பப்படும் பழங்களில் அதிகளவு பூச்சிக்கொல்லி எச்சங்கள் இருப்பதைச் சுட்டிக்காட்டியதற்காகத் தான் பழிவாங்கப்பட்டதாகக் கூறி, கலிபோர்னியாவில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில், 2022-2024 இடைப்பட்ட காலத்தில் விற்கப்பட்ட பழங்களில் சட்டப்பூர்வ அளவை விட அதிகமான பூச்சிக்கொல்லி எச்சங்கள் இருந்ததை கனடிய உணவுப் பரிசோதனை முகவரகம் உறுதிப்படுத்தியது.
பைஃபென்த்ரின், இப்ரோடியோன் மற்றும் கேப்டன் ஆகிய பூஞ்சைக் கொல்லி மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் அவற்றில் கண்டறியப்பட்டன.
அதேவேளை, தன் மீதான குற்றச்சாட்டுகளை டிரிஸ்கோல்ஸ் நிறுவனம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
கனடிய உணவுப் பாதுகாப்பு விதிகளுக்கு அமைவாகவே தமது நடவடிக்கைகள் உள்ளதாகவும், நுகர்வோரின் பாதுகாப்பிற்குத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்றுவதாகவும் மின்னஞ்சல் மூலமாக அளித்துள்ள விளக்கத்தில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

