ஒட்டாவாவில் 30 சென்டிமீட்டருக்கும் அதிகமான பனிப்பொழிவை ஏற்படுத்திய பனிப்புயலைத் தொடர்ந்து, சுத்தம் செய்யும் குழுவினர் வீதிகளை சுத்தம் செய்ததால், பனி அகற்றுதலில் இடையூறு ஏற்படுத்தும் குளிர்கால வானிலை பார்க்கிங் தடையை மீறியதற்காக ஒட்டாவா நகரம் வியாழன் மற்றும் வெள்ளி கிழமைகளில் சுமார் 3,000 டிக்கெட்டுகளை வழங்கியுள்ளது.
நகரத்தின் துணைச் சட்டம் மற்றும் ஒழுங்குமுறை சேவைகளின் இயக்குனர் ரோஜர் சாப்மேன், வியாழக்கிழமை மொத்தம் 2,950 டிக்கெட்டுகள் வழங்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
பனி அகற்றுதலில் இடையூறு ஏற்படுத்தும் வகையில் பார்க்கிங் செய்வதற்கான டிக்கெட்டுகள் $125 டொலர்கள் எனவும் முன்கூட்டியே பணம் செலுத்தி அனுமதி பெறுவதற்கு $105.டொலர்கள் என ஒட்டாவா நகர இணையதளதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பனி அகற்றுதல், வீதிகள் சுத்தம் செய்தல் மற்றும் அவசரகால வாகன அணுகல் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கு வீதிகள் தெளிவாக இருப்பதை உறுதி செய்வதற்கு தடைகள் அவசியம் என்று சாப்மேன் தெரிவித்துள்ளார்
“குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களின் பாதுகாப்பு நகரத்தின் முன்னுரிமையாகும் எனவும் மேலும் குளிர்கால பார்க்கிங் தடை அமுல்படுத்தப்படும்போது ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறோம்,” என்று அவர் தெரிவித்துள்ளார்
புதன் வியாழன் மற்றும் வெள்ளி கிழமைகளில் காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரையும் பார்க்கிங் தடை அறிவிக்கப்பட்டு அமுலுக்கு வந்தது. குளிர்கால வானிலை பார்க்கிங் தடையின் போது, பார்க்கிங் அனுமதி இல்லாமல் வீதிகளில் நிறுத்தப்படும் எந்தவொரு வாகனத்திற்கும் டிக்கெட் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளைய தினம் எதிர்வு கூறப்பட்டுள்ள பனிப்பொழிவு நிலைமையில் வாகனங்களை அனுமதி இன்றி வீதிகளில் நிறுத்த வேண்டாமென வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை டொரோண்டோ பகுதியிலும் பல வாகனங்களுக்கு டிக்கெட் வழங்கப்பட்டுள்ளன.