அகதிகளுக்கான கனடிய குடிவரவு குடியகல்வால் புதன்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையின் மூலம் எல்லைக் காவலர்களுக்கு சில சூழ்நிலைகளில் தற்காலிக வதிவிட விசாக்கள் மற்றும் இல்லத்திரனியல் கடவுசீட்டு ஆகியவற்றை இரத்துச் செய்வதற்கு வெளிப்படையான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
ஒரு ஆவணத்தை வைத்திருப்பவர் கனடாவிற்குள் அனுமதிக்க தகுதியற்றவராக காணப்பட்டால் அல்லது அது தொலைந்து போயிருந்தால், திருடப்பட்டிருந்தால், அழிக்கப்பட்டிருந்தால் அல்லது கைவிடப்பட்டிருந்தால், எல்லைப் பாதுகாப்பு மற்றும் குடிவரவு அதிகாரிகளும் இப்போது சம்பந்தப்பட்ட ஆவணங்களை இரத்து செய்ய முடியும்.
இருப்பினும் சில எல்லை அதிகாரிகள் மீண்டும் மீண்டும் விசாக்களை இரத்து செய்தால், அது மேற்பார்வையிடப்பட வேண்டும் என குடிவரவு வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.
இத்திட்டத்தின் பிரச்சனை என்னவென்றால், மக்கள் கனடாவிற்குள் வரும்போது, அவர்களுக்கு பொதுவாக தங்கள் உரிமைகள் தெரியாது, அவர்களிடம் வழக்கறிஞர்களும் இருக்கமாட்டார்கள் இப்படியான முடிவுகள் குறித்து அவர்கள் மகிழ்ச்சியற்றவர்களாக இருந்தாலும், அந்த முடிவை ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும். அத்துடன் நாட்டிற்கு வெளியே உள்ளவர்களால் இது குறித்து மேன்முறையீடு செய்வதும் மிகவும் கடினம்.
இது அரசாங்கத்தின் எல்லைகள் தொடர்பான குடியேற்றக் கொள்கையின் ஒரு பகுதியாகும், இது அடுத்த இரண்டு ஆண்டுகளில் வழங்கப்படும் தற்காலிக விசாக்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதை நோக்காக கொண்டுள்ளது.