கியூபெக் மாகாணத்தில் மொன்றியல் மாஃபியா (Montreal Mafia) பாதாள உலகக் குழுவுடன் தொடர்புடைய கோகைன் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பை கனடிய அரச காவல்படையினர் முறியடித்துள்ளனர்.
அவர்கள், அந்த போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பைச் சேர்ந்த 16 பேருக்கு எதிராகக் குற்றச்சாட்டுகளைப் பதிவுசெய்து 15 பேரைக் கைது செய்துள்ளனர். ப்ராஜெக்ட் குரோம்(Project Chrome) என்ற பெயரில் 2022 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பல ஆண்டுகாலப் புலனாய்வு நடவடிக்கையின் இறுதிக்கட்டமாகவே இந்த அதிரடிக் கைது நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன.
கனடிய அரச காவல்படையின் கூட்டுப் படை சிறப்பு அமலாக்கப் பிரிவு மற்றும் பணச்சலவை தடுப்புப் பிரிவினர், கனடா வருவாய் முகமையின் (CRA) உதவியுடன் நடத்திய இந்தத் தேடுதல் நடவடிக்கைகளின் போது, 9 மில்லியன் கனடிய டொலர்களுக்கும் அதிகமான மதிப்புடைய சொத்துக்கள் தடை உத்தரவின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.
இதில் போதைப்பொருள் கும்பலுக்குச் சொந்தமான 6 கட்டடங்கள், 14 கிலோகிராம் கோகைன் போதைப்பொருள் மற்றும் 1,45,000 டொலர்களுக்கும் அதிகமான ரொக்கப் பணம் என்பன காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. குற்றம் சாட்டப்பட்டுள்ள 16 நபர்களில் 11 பேர் மொன்றியலைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட 15 பேரும் மொன்றியால் நீதிமன்றத்தில் காணொளி வாயிலாக ஆஜர்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, வெளிநாட்டில் இருப்பதாக நம்பப்படும் எஞ்சிய ஒரு சந்தேகநபரை சர்வதேச பொலிஸாரின் உதவியுடன் கைது செய்வதற்கான
முன்னெடுப்புகள், தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சந்தேகநபர்களுக்கு எதிராக கோகைன் போதைப்பொருள் கடத்தல், விற்பனைக்காக போதைப்பொருளை வைத்திருந்தமை, சட்டவிரோதப் பணச்சலவை (Money Laundering), குற்றவியல் கும்பலின் வழிகாட்டலில் அல்லது அதன் நன்மைகளுக்காகக் குற்றங்களில் ஈடுபட்டமை மற்றும் வருமான வரிச் சட்ட மீறல்கள் உட்படப் பல்வேறு கடுமையான பிரிவுகளின்
கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கியூபெக் மாகாணத்தில் இயங்கி வரும் திட்டமிடப்பட்ட பாதாள உலக போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புகளுக்கு, இந்த நடவடிக்கை
பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
