மொன்றியல் நகர சபையினால் அண்மையில் கொண்டுவரப்பட்ட, புதிய சட்டத்திற்கு எதிராகக் கியூபெக் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பொலிஸார் மற்றும் நகர சபை ஊழியர்களை அவமதிப்பதற்குத் தடை விதிக்கும் நோக்கில் இந்த புதிய சட்டத்தை மொன்றியல் நகர சபை கொண்டுவந்தது.
நபர்களின் கருத்துச் சுதந்திரத்தைப் பாதிக்கும் வகையில் அமைந்துள்ள இந்தச் சட்டத்தை உடனடியாக இடைநிறுத்தி, முழுமையாக ரத்து செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இக்கோரிக்கையை இரண்டு சட்ட உரிமைகள் அமைப்புகள் இணைந்து முன்வைத்துள்ளதுடன், அவை இந்த சட்டப் போராட்டத்தையும் ஆரம்பித்துள்ளன.
முற்போக்கு சட்டத்தரணிகள் சங்கம் (AJP) மற்றும் செயிண்ட்-மைக்கேல் சட்ட மருத்துவமனை (CJSM) ஆகிய இரு அமைப்புகளுமே, மொன்றியல் நகர நிர்வாகத்திற்கு எதிராக நீதிமன்றத்தை நாடியுள்ளன.
கடந்த மாதம் 21ஆம் திகதி அவசர அவசரமாகப் பொதுமக்களின் கருத்துகள் கேட்கப்படாமல் நிறைவேற்றப்பட்ட இந்தச் சட்டத்தின் கீழ், பொலிஸார், நகர சபை ஊழியர்கள் அல்லது நகர சபை சார்பில் பணியாற்றுபவர்களை அவமதிப்பது, அச்சுறுத்துவது, துன்புறுத்துவது மற்றும் கோபமூட்டும் முறையில் நடந்துகொள்வது முதலான செயல்கள் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளன.
இச்சட்ட மீறலில் ஈடுபடும் நபர்களுக்கு முதல் தடவையாக 300 டொலர் முதல் 1,000 டொலர் வரையிலும், அடுத்தடுத்த மீறல்களுக்கு 2,000 டொலர் வரையிலும் அபராதம் விதிக்க வகை செய்யப்பட்டுள்ளது.
எனினும், இச்சட்டத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள சொற்பதங்கள் மிகவும் பரந்த அர்த்தத்தைக் கொண்டிருப்பதாகச் சட்ட வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இது அரசியல் ரீதியான கருத்து வெளிப்பாடுகள், அமைதி வழியிலான போராட்டங்கள் மற்றும் பொலிஸாரின் நடவடிக்கைகளுக்கு எதிரான விமர்சனங்களைக் கூடக் குற்றச் செயலாகக் காட்டும் அபாயத்தைக் கொண்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

