அமெரிக்காவிற்கும் கனடாவுக்கும் இடையிலான வர்த்தக மோதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், கனடா “சிறிய பாடமொன்றைக் கற்றுக்கொண்டு வருகிறது” என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டனில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அதிபர் ட்ரம்ப், கனடாவின் தலைவர்கள் மிகவும் மோசமாகச் செயற்பட்டுள்ளதாகவும், அமெரிக்காவை அவர்கள் பல வருடங்களாகச் சாதகமாகப் பயன்படுத்தி வந்துள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.
கனடியத் தலைவர்கள் அமெரிக்காவின் முந்தைய பலவீனமான தலைமைத்துவத்தைப் பயன்படுத்திப் பயனடைந்ததாகத் தெரிவித்த ட்ரம்ப், “அவர்கள் தங்களை முற்றிலும் குற்றமற்றவர்கள் போலக் காட்டிக் கொள்கிறார்கள் எனவும் அவர்கள் மிகவும் மோசமாக நடந்துகொண்டார்கள் எனவும் குறிப்பிட்டார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் போர் தீவிரமடைந்து வரும் பின்னணியிலேயே ட்ரம்பின் இந்தக் கருத்துக்கள் வெளியாகியுள்ளன.
சமீபத்தில் மோட்டார் சைக்கிள்கள், பால் பொருட்கள் மற்றும் மதுபானங்கள் உள்ளிட்ட பல கனடியப் பொருட்களுக்கு அமெரிக்கா இறக்குமதித் தடையை விதித்திருந்தது.
கனடா விதித்த வர்த்தகக் கட்டுப்பாடுகளுக்குப் பதிலடியாகவே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை, கனடியப் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட இறக்குமதித் தடைகள் மற்றும் கூடுதல் வரிகள் காரணமாக, கனடாவின் பொருளாதார வளர்ச்சிக் கணிப்பீட்டை ‘டெலாய்ட் கனடா’ (Deloitte Canada) நிறுவனம், 20 சதவீதத்தால் குறைத்துள்ளது.
இந்த நிலைமை குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள பிரதமர் மார்க் கார்னி (Mark Carney), கனடா எப்போதும் நல்லெண்ண அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராகவே இருப்பதாகத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

