மொன்றியல் நகரின் அத்தியாவசியமற்ற பல சேவைகள் தற்போது முற்றாக முடங்கியுள்ளன.
மொன்றியல் மாநகரசபையின் சுமார் 6,500 துப்புரவு மற்றும் பராமரிப்புத் தொழிலாளர்கள் நேற்று காலை முதல் 48 மணிநேர அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.
இதன் காரணமாகவே, மொன்றியல் நகரம் பாரிய நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. மொன்றியல் நகரில் வீதிகளைச் சுத்தம் செய்தல், பூங்கா பராமரிப்பு மற்றும் குப்பை சேகரிப்புப் பணிகள் பல பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ளன. மொன்றியல் மாநகரசபையினால் நிர்வகிக்கப்படும் விளையாட்டு அரங்குகள்
மற்றும் ஈக்கோ-சென்டர்கள் (Eco-centres) அனைத்தும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
வீதிகளில் உள்ள குழிகளைச் சீரமைக்கும் பணிகள் மற்றும் ஏனைய திருத்த வேலைகள் அனைத்தும் மொன்றியலில் இடைநிறுத்தப்பட்டுள்ளன. சம்பள உயர்வு மற்றும் வேலை நேர ஒழுங்குமுறை தொடர்பாக மொன்றியல் மாநகரசபை நிர்வாகத்திற்கும், தொழிற்சங்கத்திற்கும் இடையே ஏற்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததே இந்தப் போராட்டத்திற்குக் காரணமாகும்.
அதிகரித்து வரும் பணவீக்கத்திற்கு ஏற்ப ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும் எனவும், ஊழியர்களின் நலன் கருதி வேலை நேரங்களில் நெகிழ்வுத்தன்மை இருக்க வேண்டும் எனவும் தொழிற்சங்கத்தினர் வலியுறுத்துகின்றனர். இதேவேளை, தற்போதைய நிதி நிலைமையைக் கருத்தில் கொண்டு முறையான சலுகைகளை வழங்கத் தயாராக இருப்பதாக மொன்றியல் மேயர்
தரப்பு தெரிவித்துள்ளது.
இந்த வேலைநிறுத்தம் எதிர்வரும் வியாழக்கிழமை நிறைவடையும் எனவும், மொன்றியல் மாநகரசபையின் சேவைகள் அனைத்தும் அன்றைய தினம்
வழமைக்குத் திரும்பும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
