அமெரிக்காவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தையிலிருந்து விலகுவதற்குப் பிரதமர் மார்க் கார்னி தலைமையிலான கனடிய அரசாங்கம் எடுத்த தீர்மானம் மிகவும் கடினமானது எனினும், நாட்டின் இறைமையைப் பாதுகாப்பதற்கு அவ்வாறு விலகுவதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை என முன்னாள் பிரதமரும் கன்சர்வேடிவ் கட்சியின் முன்னாள் தலைவருமான ஸ்டீபன் ஹார்பர் (Stephen Harper) தெரிவித்துள்ளார்.
டொரண்டோ நகரில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க ‘கனடா முதலீட்டு உச்சிமாநாட்டின்’ (Canada Investment Summit) நிறைவு விழாவில் முதன்மை உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவுடனான வர்த்தகப் போர் உச்சமடைந்துள்ள நிலையில், தற்போதைய லிபரல் அரசின் வெளியுறவு மற்றும் பொருளாதார நிலைப்பாட்டிற்கு எதிர்க்கட்சியின் முன்னாள் தலைவர் ஒருவர் பகிரங்கமாக ஆதரவு தெரிவித்துள்ளமை கனேடிய அரசியல் அரங்கில் முக்கிய மாற்றமாகக் கருதப்படுகிறது.
விழாவில் தொடர்ந்து உரையாற்றிய ஸ்டீபன் ஹார்பர், “அமெரிக்காவுடனான தற்போதைய உறவின் நிலைமை மிகவும் வருத்தமளிப்பதாக இருப்பினும், அது காலத்தின் கட்டாயமாகும். அண்டை நாடான அமெரிக்கா மீதான பொருளாதாரத் தங்கிவாழ்தலைக் கனடா உடனடியாகக் குறைத்துக் கொள்ள வேண்டும்” எனத் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், வெளிப்புறக் காரணிகளை மட்டுமே குற்றம் சுமத்திக் கொண்டிருக்காமல், நாட்டின் உட்கட்டமைப்பு, உள்நாட்டுப் போட்டித்தன்மை மற்றும் உலகளாவிய தொடர்புகளை வலுப்படுத்துவதன் மூலம் கனடா உண்மையான இறைமையுள்ள நாடாக உருவெடுக்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

