கனடாவின் நான்கு முக்கிய சர்வதேச விமான நிலையங்களில் தனியார் முதலீடுகளை அனுமதிப்பதற்குப் பிரதமர் மார்க் கார்னி தலைமையிலான மத்திய அரசாங்கம் எடுத்துள்ள முடிவுக்கு நாட்டின் முன்னணித் தொழிலாளர் சங்கங்கள் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளன.
இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் விமான நிலைய ஊழியர்களின் உரிமைகள் பறிக்கப்படுவதோடு, பயணிகள் கூடுதல் கட்டணச் சுமைகளைச் சந்திக்க நேரிடும் எனத் தொழிலாளர் பிரதிநிதிகள் எச்சரித்துள்ளனர்.
பிரதமர் மார்க் கார்னியின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் பரிந்துரைக்கமைய, ரொறன்ரோ பியர்சன் (Toronto Pearson), வனகூவர் (Vancouver), மொன்றியல் ட்ரூடோ (Montréal-Trudeau) மற்றும் கல்கரி (Calgary) ஆகிய நான்கு பிரதான சர்வதேச விமான நிலையங்களின் செயல்பாடுகள் மற்றும் அபிவிருத்திப் பணிகளில் தனியார் முதலீட்டாளர்களை இணைத்துக்கொள்ள அரசு தீர்மானித்துள்ளது.
அரசாங்கத்தின் இந்த முடிவைக் கடுமையாகச் சாடியுள்ள கனேடியப் பொதுச் சேவை ஒன்றியத்தின் (PSAC) பிரதிநிதிகள், விமான நிலையங்களை இலாப நோக்கிலான தனியார் நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் ஒப்படைப்பது பொதுமக்களின் நலனுக்கு உகந்ததல்ல எனக் குறிப்பிட்டுள்ளனர்.
இலாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு இயங்கும் தனியார் முதலீட்டாளர்கள், செலவுகளைக் குறைப்பதற்காக ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைக்கவும், ஊதியங்களை குறைக்கவும் முற்படுவர் எனத் தொழிற்சங்கங்கள் குற்றம் சுமத்தியுள்ளன.
அதேவேளை, விமான நிலையச் சேவைகளுக்கான கட்டணங்கள், பார்க்கிங் கட்டணங்கள் மற்றும் விமானக் பயணச் சீட்டுகளின் வரிகள் அதிகரிக்கப்பட்டு, அந்தப் பாரம் இறுதியில் பயணிகள் மீதே சுமத்தப்படும் என்றும் அவை சுட்டிக்காட்டியுள்ளன.

