மொன்றியல் பெருநகரப் பகுதியிலுள்ள வில்-மேரி (Ville-Marie) நகரில் அமைந்துள்ள நகைக்கடையொன்றில் கண்ணாடிகளை உடைத்து துணிச்சலாக கொள்ளையடித்த சம்பவம் தொடர்பாக, மூன்று சிறுவர்கள் உட்பட ஐந்து சந்தேகநபர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் தற்போது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
கடந்த 11 ஆம் திகதி நண்பகல் 12:30 மணியளவில், கிளார்க் வீதி மற்றும் விஜர் அவென்யூ சந்திப்பிற்கு அருகில் அமைந்துள்ள நகைக்கடை ஒன்றுக்குள் நுழைந்த ஐந்து பேர் கொண்ட கும்பல், அங்கிருந்த கண்ணாடிக் கதவுகள் மற்றும் நகைக் காட்சிப் பேழைகளைக் கைக்கருவிகளால் அடித்து நொறுக்கி நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றது.
இச்சம்பவத்தின் போது கடையிலிருந்த ஊழியர் அதிர்ஷ்டவசமாக எவ்வித காயங்களுமின்றி தப்பியுள்ளார்.
கொள்ளைச் சம்பவம் நடந்து அரை மணி நேரத்திற்குள், மொன்றியல் பொலிஸார் (SPVM) விரைந்து செயற்பட்டு ‘செயின்ட்-லோரண்ட்’ (Saint-Laurent) பகுதியில் வைத்து ஐந்து சந்தேகநபர்களையும் கைது செய்தனர்.
அத்துடன் அவர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட நகைகளையும் பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் வயது வந்தவர்களான ஜேசன் கிளெர்வோ, ரோல்டி ஃபெனலன்-ஜீன் ஆகிய இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அவர்கள் மீது கட்டடத்திற்குள் அத்துமீறி நுழைதல், ஆயுதமேந்திய கொள்ளை, திருட்டுக்கான கருவிகளை வைத்திருத்தல், குற்றவியல் நோக்கத்திற்காக முகமூடி அணிதல் மற்றும் சேதப்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், ஜேசன் கிளெர்வோ மீது களவாடப்பட்ட பொருட்களை வைத்திருந்ததாகவும் மேலதிகக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
அதேவேளை, இவ்வழக்கில் தொடர்புடைய 16 வயதான இருவர் மற்றும் 17 வயதான ஒருவர் உட்பட மூன்று சிறுவர்களும் சிறுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, அவர்கள் மீதும் இதேபோன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
மொன்றியல் பிராந்தியத்தில் அண்மைக்காலமாக இடம்பெற்று வரும் இதேபோன்ற தொடர் நகைக்கடை கொள்ளைச் சம்பவங்களுடன் இந்த நபர்களுக்கு தொடர்புள்ளதா என்பது குறித்து மொன்றியல் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

