மொன்றியல் மாநகர எல்லைக்குள் உள்ள பொதுப் பூங்காக்கள் மற்றும் பொது இடங்களில் தங்கியிருக்கும் வீடற்ற மக்களின் (Homeless) தற்காலிகக் கூடாரங்களை அகற்றுவதற்கு முன்னர், அவர்களுக்குக் குறைந்தது 24
மணிநேரத்திற்கு முன்பதாக எழுத்துப்பூர்வமான உத்தியோகபூர்வ அறிவித்தலை (Written Notice) வழங்குவதைக் கட்டாயமாக்கும் புதிய வழிமுறை விதிகளை மொன்றியல் மாநகர சபை அமல்படுத்தியுள்ளது. மொன்றியல் மாநகர உத்தியோகத்தர்கள் மற்றும் உள்ளூர் பொலிஸார் வீடற்றோரின் தற்காலிகத் தங்குமிடங்களை தன்னிச்சையாகவும் திடீரெனவும் அகற்றுவதைத் தடுக்கும் நோக்கில் இந்த புதிய நிர்வாகக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
இதன்படி, சம்பந்தப்பட்ட கூடாரங்கள் பொதுமக்களின் பாதுகாப்பிற்கோ அல்லது நகரின் முக்கிய உள்கட்டமைப்புகளுக்கோ உடனடி அச்சுறுத்தலாக அமையாத பட்சத்தில், அவற்றை எவ்வித முன்னறிவிப்புமின்றி அகற்றுவதற்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. வீடற்றோரின் கூடாரங்களை அகற்றும் நடவடிக்கையை வெறும் சட்டம் ஒழுங்கு பிரச்சினையாகப் பார்க்காமல், சமூகப் பொறுப்புணர்வுடன் கையாள்வதற்காக, பல்துறைசார் கூட்டுப் புலனாய்வு உத்திகள் புதிய ஒழுங்குவிதியில் சேர்க்கப்பட்டுள்ளன. ஒரு கூடாரத்தை அகற்றுவதற்கான அறிவித்தல் வழங்கப்படுவதற்கு முன்னர், மொன்றியல் மாநகரசபையின் விசேட சமூக நலப் பணியாளர்கள (Social Workers) மற்றும் வீட்டுவசதி மேம்பாட்டு அதிகாரிகள் நேரடியாகச் சென்று அங்குள்ள மக்களின் உடல் மற்றும் மனநலத் தேவைகளை ஆவணப்படுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
