கியூபெக் மாகாணத்தில் கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகளுக்கான டிக்கெட்டுகளை அவற்றின் அசல் விலையை விட (Face Value) கூடுதல் விலைக்கு மறுவிற்பனை செய்வதற்குப் புதிய சட்டத்தின் கீழ் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், டிக்கெட் மறுவிற்பனைக்குக் கடுமையான விலைக் கட்டுப்பாடுகளை (Price Cap) விதித்துள்ள அண்டை மாகாணமான ஒண்டாரியோவின் (Ontario) சட்ட நடைமுறையிலிருந்து கியூபெக் முற்றிலும் மாறுபட்ட ஒரு திறந்த சந்தைக் கொள்கையைத் தேர்வு செய்துள்ளது. கியூபெக் தேசிய அவையில் நீதியமைச்சர் சைமன் ஜோலின்-பாரெட் (Simon Jolin-Barrette) சமர்ப்பித்துள்ள புதிய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டமூலத்தின்படி (Bill 10), டிக்கெட்டுகளின் விலையை அரசு நேரடியாகக்
கட்டுப்படுத்தாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
டிக்கெட் மறுவிற்பனையை முழுமையாகத் தடை செய்தால், அது கறுப்புச் சந்தை (Illegal Market) மற்றும் சட்டவிரோத இணையக் குழுக்கள் உருவாவதற்கே வழிவகுக்கும் என்பதால், விலைக் கட்டுப்பாட்டிற்குப் பதிலாக மறுவிற்பனைச் சந்தையில் முழுமையான "வெளிப்படைத்தன்மையை(Transparency)க் கொண்டுவரவே அரசு முன்னுரிமை அளித்துள்ளதாக நீதியமைச்சர் விளக்கமளித்துள்ளார். டிக்கெட்டுகளின் விலையை நிர்ணயிக்கும் சுதந்திரத்தை மறுவிற்பனையாளர்களுக்கு வழங்கியுள்ள அதேவேளை, நுகர்வோர் ஏமாற்றப்படுவதைத் தடுக்க “ஸ்டப்ஹப்” (StubHub) மற்றும் “டிக்கெட்மாஸ்டர்” (Ticketmaster) போன்ற இணையத் தளங்களுக்குப் புதிய சட்டத்தின் கீழ் கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
டிக்கெட்டை மறுவிற்பனை செய்யும் நபர், அதன் அசல் விலை எவ்வளவு, தற்போதைய கூடுதல் கட்டணங்கள் என்ன, இருக்கையின் துல்லியமான விபரம் மற்றும் அந்த டிக்கெட்டின் முந்தைய உரிமையாளரின் பெயர் ஆகிய விபரங்களை, வாடிக்கையாளருக்குக் கட்டாயம் தெரிவிக்க வேண்டும் என கியூபெக்கின் புதிய சட்டம் குறிப்பிட்டுள்ளது.
