மொன்றியல் நகரின் பெரும்பாலான வணிக நிறுவனங்கள்,வாடிக்கையாளர்களுக்குப் பிரெஞ்சு மொழியில் சேவை வழங்க வேண்டும்என்ற மாகாணத்தின் கடுமையான மொழியுரிமைச் சட்ட விதிகளைச் சரியாகப் பின்பற்றி வருவதாக தெரியவந்துள்ளது. கியூபெக் பிரெஞ்சு மொழி வாரியம் (OQLF) நடத்திய ஆய்வின் மூலமாகவே, இந்தத் தகவல் வெளியாகியுள்ளது. கியூபெக் மாகாணத்தின் உத்தியோகபூர்வ மொழியான பிரெஞ்சு மொழியைப் பாதுகாப்பதற்காகக் கொண்டுவரப்பட்ட பிரெஞ்சு மொழிப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இந்த விசேட மொழிக் கண்காணிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
மொன்றியலின் பிரதான வர்த்தக வீதிகளான தசரெவ் (Taschereau), லோரென்ரைட்ஸ் (Laurentides) மற்றும் லத்தீன் குவாட்டர் (Latin Quarter) உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள சுமார் 1,000 வணிக நிறுவனங்களில் இந்த நேரடி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. வாடிக்கையாளர்கள் தங்களுக்குத் தேவையான விபரங்களைப் பிரெஞ்சு மொழியில் பெறுவதற்கும், அந்த மொழியில் சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கும் 98 சதவீத கடைகளில் வசதிகள் இருந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
மொன்றியல் நகரில் ஆய்வு செய்யப்பட்ட வணிக வளாகங்களில் 92 சதவீதகடைகளின் வெளிப்புறப் பெயர்ப்பலகைகளில் பிரெஞ்சு மொழி மிகத் தெளிவாகவும் சட்டத்திற்கு உட்பட்டும் முதன்மையாக (Predominant)
அச்சிடப்பட்டிருந்தமை அவதானிக்கப்பட்டுள்ளது.
நுகர்வோருக்கு வழங்கப்படும் கொள்முதல் ரசீதுகள் மற்றும் விலைப்பட்டியல்களைப் பிரெஞ்சு மொழியில் அச்சிட்டு வழங்குவதில் 89 சதவீத நிறுவனங்கள் சட்டத்தை மதித்து நடந்துள்ளதாக, அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.
