செயற்கை நுண்ணறிவை (AI) சரியாகக் கையாளாவிட்டால் அது ஆபத்தானது என்று எச்சரித்துள்ளார் அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, இந்தச் சிக்கலை எதிர்கொள்ளக் கொள்கை மற்றும் ஆளுகைக்கான நிகழ்ச்சி நிரல்களை உருவாக்குமாறு ஜனநாயகக் கட்சியினரை வலியுறுத்தியுள்ளார்
அண்மையில் நடைபெற்ற தனியார் நிதி திரட்டும் நிகழ்வொன்றில் பேசிய ஒபாமா, AI தொழில்நுட்பம் தனியார் கைகளில் மிக வேகமாகச் சென்று கொண்டிருப்பதாகவும், கவனமாகக் கையாளத் தவறினால் அது ஆபத்தாக மாறக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
வரவிருக்கும் நவம்பர் 3 -ஆம் தேதி இடைக்காலத் தேர்தலில் ஜனநாயகக் கட்சியினர் பிரதிநிதிகள் சபையை மீண்டும் கைப்பற்றினால், AI கொள்கை குறித்த பொது விவாதத்திற்கான கட்டமைப்பை உருவாக்க உதவுமாறு சிறுபான்மைத் தலைவர் ஹக்கீம் ஜெஃப்ரீஸை அவர் ஊக்குவித்துள்ளார். மேலும், 2028 அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் AI தொடர்பான பாதுகாப்பு மற்றும் பொருளாதாரக் கவலைகளை எதிர்கொள்ளும் தெளிவான திட்டத்தை முதன்மை நிகழ்ச்சி நிரலாக மாற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
OpenAI நிறுவனத்தின் போட்டியாளரான Anthropic நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் AI தொழில் நுட்பத்தால் மனிதகுலத்தின் அழிவு நேரிடலாம் என எச்சரித்ததைத் தொடர்ந்து, AI அமைப்புகளுக்குக் கடுமையான விதிகளைக் கொண்டுவருமாறு அமெரிக்கச் சட்டமியற்றுபவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். AI ஏஜென்ட்கள் வெளிப்புற அமைப்புகளை ஹேக் செய்ய வழிகெட்டுச் செயல்பட்ட சம்பவங்கள் மற்றும் தொழில்நுட்ப ஆபத்துக்கள் காரணமாக ஆராய்ச்சியாளர்கள் நிறுவனங்களை விட்டு விலகியதும் இந்த அச்சங்களை அதிகரித்துள்ளது.
இதனிடையே, AI மாதிரித் திறன்களின் மேம்பாட்டு வேகத்தைக் குறைக்குமாறு Anthropic CEO டாரியோ அமோடி கோரிக்கை விடுத்துள்ளார். இந்தக் கருத்தை OpenAI CEO சாம் ஆல்ட்மேன் மற்றும் xAI நிறுவனத்தைச் சேர்ந்த எலான் மாஸ்க் ஆகிய இருவரும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

