திருடப்பட்ட வாகனம் ஒன்றில் பயணித்து பெண்ணொருவர் மீது ஆயுதப் பிரயோகத் தாக்குதல் நடாத்தியதுடன், பொலிஸாரின் பிடியிலிருந்து தப்பிக்க முற்பட்ட 14 முதல் 18 வயதுக்குட்பட்ட 8 சிறுவர்களை, லோங்கே மற்றும் மொண்ட்ரியால் பொலிஸார் இணைந்து கைது செய்துள்ளனர்.
லோங்கே (Longueuil) நகரிலுள்ள ரோலண்ட்-தெரியன் (Roland-Therrien) மற்றும் ஜாக்-கார்ட்டியர் ஈஸ்ட் (Jacques-Cartier East) வீதிச் சந்திப்பிற்கு அருகிலுள்ள வணிக வளாகம் ஒன்றின் வாகன தரிப்பிடத்திலேயே இச்சம்பவம் ஆரம்பமானது.
சம்பவ இடத்திலிருந்து தப்பியோடிய வாகனத்தைக் கண்டறிந்த லோங்கே பொலிஸார் (SPAL), அதனை உடனடியாக நிறுத்துமாறு உத்தரவிட்டனர்.
இருப்பினும், வாகனத்தைச் செலுத்திய சிறுவன் பொலிஸாரின் கட்டளையைப் புறக்கணித்து காரை வேகமாகச் செலுத்தியதால், பொலிஸார் வாகனத்தைத் துரத்தத் தொடங்கினர்.
இந்தத் துரத்தல் நடவடிக்கை லோங்கே நகரிலிருந்து மொண்ட்ரியல் நகர எல்லை வரை நீடித்தது.
இதனைத் தொடர்ந்து, லோங்கே பொலிஸ் பிரிவுக்கு உதவியாக மொண்ட்ரியால் பொலிஸ் சேவை (SPVM) மற்றும் கியூபெக் மாகாணப் பொலிஸார் (Sûreté du Québec) ஆகிய மூன்று பொலிஸ் படைகளும் இணைந்து துரித நடவடிக்கை மேற்கொண்டு, சந்தேகநபர்கள் பயணித்த வாகனத்தைச் சுற்றி வளைத்து 8 சிறுவர்களையும் கைது செய்தனர்.
அவர்கள் பயணித்த கார் திருடப்பட்ட ஒன்று என்பதும் சோதனைகளின் போது உறுதி செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட 8 சிறுவர்களில் 6 பேர் நிபந்தனைகளுடன் கூடிய பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், இருவர் தொடர்ந்தும் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

