நியூஃபவுண்ட்லேண்ட் மற்றும் லாப்ரடோர் மாகாணத்துடன் எட்டப்பட்டுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க சர்ச்சில் ஃபால்ஸ் (Churchill Falls) நீர்மின் ஒப்பந்தம், எதிர்வரும் கியூபெக் மாகாணத் தேர்தலில் பெரும் அரசியல் புயலையும் கடுமையான விவாதங்களையும் தோற்றுவித்துள்ளது.
கியூபெக் பிரதமர் கிறிஸ்டின் ஃப்ரெஷெட், நியூஃபவுண்ட்லேண்ட் பிரதமர் டோனி வேக்ஹாம் மற்றும் கனடிய பிரதமர் மார்க் கார்னி ஆகியோர் இணைந்து அறிவித்துள்ள இந்த பிரம்மாண்ட தூய்மை ஆற்றல் திட்டத்தின் மொத்த மதிப்பு சுமார் 70 பில்லியன் டொலர்களாகும்.
இதில் மத்திய அரசு 10 பில்லியன் டொலர்களை நிதி உதவியாக வழங்கிப் பங்களிக்கிறது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் கியூபெக் மாகாணம் 10,000 மெகாவாட் கூடுதல் மின்சாரத்தைப் பெறவுள்ளதுடன், அடுத்த 50 ஆண்டுகளில் மின் கட்டணத்தில் சுமார் 200 பில்லியன் டொலர் வரை சேமிக்க முடியும் என ஆளும் CAQ கட்சி அரசுத் தரப்பு தெரிவிக்கின்றது.
இதேவேளை, ”மாகாணத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கியூபெக் மாகாணத்திற்கு அடுத்த 50 ஆண்டுகளுக்குப் பிணைப்பை ஏற்படுத்தும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஆளும் ‘கொஅலிஷான் அவனிர் கியூபெக்’ (CAQ) அரசுக்கு எந்தவித அரசியல் தகுதியும் (Legitimacy) கிடையாது” என பிரதான எதிர்க்கட்சியான பார்ட்டி கியூபெக்வா (PQ) கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
அந்தக் தலைவர் போல் செயிண்ட்-பியர் பிளாமண்டன் (Paul St-Pierre Plamondon) இந்த நீர்மின் ஒப்பந்தத்தை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

