பிரசவ மற்றும் பெற்றோர் பராமரிப்பு விடுப்பில் (Maternity and Parental Leave) இருந்தபோது அல்லது விடுப்பு முடிவடைந்த உடனேயே வேலைவாய்ப்பை இழந்த பெண்களுக்கு, வழக்கமான வேலைவாய்ப்பு காப்புறுதிச் (EI) சலுகைகளை மறுப்பது பாலினப் பாகுபாடானது என்றும், நாட்டின் அரசியலமைப்பு உரிமைகளை மீறுவதாகும் என்றும் நாட்டின் மத்திய மேல்முறையீட்டு நீதிமன்றம் (Federal Court of Appeal) வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது.
கியூபெக் மாகாணத்தைச் சேர்ந்த ஆறு தாய்மார்கள் தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்த மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு, ஒருமனதாக இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.
தற்போதைய வேலைவாய்ப்பு காப்புறுதிச் சட்டத்தின் சில பகுதிகள் பாலினப் பாகுபாட்டை ஊக்குவிக்கும் வகையில் அமைந்திருப்பதாகச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், அவை கனடிய உரிமைகள் மற்றும் சுதந்திரங்களுக்கான சாசனத்தின் (Canadian Charter of Rights and Freedoms) 15-வது பிரிவை மீறுவதாகத் தெரிவித்தனர்.
பிரசவ விடுப்புக் காலத்தில் வேலைநீக்கம் செய்யப்பட்ட இந்த ஆறு தாய்மார்களும், தாங்கள் ஏற்கனவே பிரசவகாலச் சலுகைகளைப் பெற்றதால், வேலை இழப்பிற்கான வழக்கமான சலுகைகளைப் பெறத் தகுதியற்றவர்கள் எனத் தெரிவித்து நிராகரிக்கப்பட்டிருந்தனர்.
சட்டத்தின் சில விதிகள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவாகப் பொருந்தினாலும், கர்ப்பமடைவதும் குழந்தையைப் பெற்றெடுப்பதும் பெண்களே என்பதால், இச்சட்டம் பெண்களையே அதிகளவில் நெகிழ்வற்ற முறையில் பாதிக்கிறது என நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
பிரசவகாலச் சலுகைகளையும் வேலை இழப்புச் சலுகைகளையும் ஒன்று சேர்த்துப் பெறுவதைக் கட்டுப்படுத்தும் இச்சட்ட விதிகள், தாய்மார்களின் பொருளாதாரச் சுமையையும் நலிவுற்ற நிலையையும் மேலும் அதிகரிப்பதாக, நீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.



