யூத சமூகத்தின் மிக முக்கியமான புனித நாட்களின் தொடக்கத்தை முன்னிட்டு, மொண்ட்ரியல் நகரிலுள்ள யூத வழிபாட்டுத் தலங்கள், பாடசாலைகள் மற்றும் சமூக மையங்களைச் சுற்றி பாதுகாப்பை அதிகரிக்கவுள்ளதாக, மொண்ட்ரியல் பொலிஸ் திணைக்களம் (SPVM) அறிவித்துள்ளது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான சூழ்நிலை மற்றும் இஸ்ரேல் மீதான ஒக்டோபர் 7 தாக்குதலின் முதலாண்டு நிறைவு நெருங்கி வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அடுத்த 24 நாட்களுக்கு இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
நகரத்தின் துணை பொலிஸ் அதிபர் வின்சென்ட் ரிச்சர் (Vincent Richer) இது குறித்து தெரிவிக்கையில், யூத சமூகத்திற்கு எதிராகத் தற்போது நேரடி அல்லது குறிப்பிட்ட அச்சுறுத்தல்கள் எதுவும் இனங்காணப்படவில்லை எனினும், யூத மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவே ரோந்து நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறினார்.
கடந்த 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதிக்குப் பின்னர் மொண்ட்ரியல் நகரில் யூத மற்றும் அரபு-முஸ்லிம் சமூகங்களுக்கு எதிரான வெறுப்புக் குற்றங்கள் மற்றும் சம்பவங்கள் கணிசமாக அதிகரித்துள்ளன.
மொண்ட்ரியல் பொலிஸாரின் தரவுகளின்படி, பதிவு செய்யப்பட்ட 288 வெறுப்புச் சம்பவங்களில் 213 சம்பவங்கள் யூத சமூக இலக்குகளுக்கு எதிராகவும், 75 சம்பவங்கள் அரபு-முஸ்லிம் சமூக இலக்குகளுக்கு எதிராகவும் பதிவாகியுள்ளன.
கடந்த ஓராண்டில் பல யூத பாடசாலைகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டமை, வழிபாட்டுத் தலங்கள் சேதப்படுத்தப்பட்டமை மற்றும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டமை போன்ற சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.



