கியூபெக்கில் நடைபெறவுள்ள மாகாணத் தேர்தலுக்கான வாக்காளர் தகவல் ஆவணங்களை பிரெஞ்சு மொழியில் மட்டுமே அஞ்சல் மூலம் அனுப்புவதற்கு எடுக்கப்பட்டுள்ள முடிவினை கியூபெக் லிபரல் கட்சி எதிர்த்துள்ளது.
கியூபெக் லிபரல் கட்சியின் தலைவர் சார்ள்ஸ் மிலியார்ட் (Charles Milliard) இது தொடர்பில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஜனநாயக உரிமைகளுக்கு முன்னால் மொழி அரசியலை முன்னிறுத்துவதைக் கைவிட்டு, இத்தவறான முடிவை உடனடியாகத் திரும்பப் பெறுமாறு கியூபெக் முதலமைச்சர் கிறிஸ்டின் ஃப்ரெஷெட்டிற்கு (Christine Fréchette) அவர் பகிரங்கக் கோரிக்கை விடுத்துள்ளார்.
எதிர்வரும் ஒக்டோபர் 5-ஆம் திகதி கியூபெக் மாகாணத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், வாக்காளர் வழிகாட்டி மற்றும் தகவல் ஆவணங்கள் அனைத்தும் பிரெஞ்சு மொழியில் மட்டுமே அச்சிட்டு அனுப்பப்படும் எனத் தேர்தல் ஆணையமான எலக்சன்ஸ் கியூபெக் (Élections Québec) கடந்த செவ்வாய்க்கிழமை அன்று அறிவித்தது.
கியூபெக்கின் Bill 96 எனப்படும் பிரெஞ்சு மொழிச் சட்டத்திற்கு அமைவாகவே இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்த முடிவுக்கு எதிர்ப்புக்கள் கிளம்பியபோதிலும், தேர்தல் ஆவணங்களை வேறு மொழியில் அனுப்பப்போவதில்லை என்பதில் தாம் உறுதியாக இருப்பதாக, கியூபெக் முதலமைச்சர் கிறிஸ்டின் ஃப்ரெஷெட் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
இதனையடுத்து, கியூபெக் முதலமைச்சருக்குத் கடிதம் ஒன்றை எழுதியுள்ள கியூபெக் லிபரல் கட்சியின் தலைவர் சார்ளஸ் மிலியார்ட், அரசின் இப்போக்கை “ஆங்கிலம் பேசும் கியூபெக் மக்களின் ஜனநாயக உரிமைகள் மீதான நியாயமற்ற தாக்குதல்” எனக் கடுமையாக விமர்சித்துள்ளார்.



