தமது மாகாண அரசாங்கம் தலைமைத் தேர்தல் அதிகாரியுடன் அவசரப் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக, கியூபெக் முதலமைச்சர் கிறிஸ்டின்
ஃப்ரெஷெட் (Christine Fréchette) தெரிவித்துள்ளார்.
”எதிர்வரும் கியூபெக் மாகாணப் பொதுத்தேர்தலில் வாக்காளர்களின் முகவரிகளுக்கு அனுப்பப்படும் தகவல் அட்டைகள் மற்றும் வழிகாட்டி ஆவணங்களை பிரெஞ்சு மொழியில் மட்டுமே அச்சுப்பதித்து அனுப்புவது” என்ற தலைமைத் தேர்தல் அதிகாரியின் முடிவு தொடர்பிலேயே, இந்த பேச்சுவார்த்தை நடைபெறுகின்றது.
மாகாண தேர்தல் பிரசாரத்தின் போது செய்தியாளர்களைச் சந்தித்த கியூபெக் முதலமைச்சர் கிறிஸ்டின் ஃப்ரெஷெட், தங்களுக்கு இருக்கும் சட்டப்பூர்வப்
பொறுப்புகள் மற்றும் கடமைகள் என்ன என்பதை ஆராய்ந்து, அதற்கேற்ப விதிமுறைகளை மதிப்பதாகக்” குறிப்பிட்டார். இருப்பினும், இந்தப் பேச்சு வார்த்தைகளின் முடிவில் தேர்தல் ஆணையத்தின் முந்தைய தீர்மானம் திரும்பப் பெறப்படுமா அல்லது மாற்றம் செய்யப்படுமா என்பது குறித்து, கியூபெக் முதலமைச்சர் கிறிஸ்டின் ஃப்ரெஷெட் தெளிவான பதிலை அளிக்கவில்லை.
முன்னதாக, 2022 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட கியூபெக்கின் கடுமையான பிரெஞ்சு மொழிச் சட்டத்திற்கு (சட்டம் 96 / Bill 96) அமைவாகவே, இம்முறை தபால் மூலம் அனுப்பப்படும் அனைத்துத் தேர்தல் ஆவணங்களும் பிரெஞ்சு மொழியில் மட்டுமே அச்சிடப்படும் என எலெக்ஷன்ஸ் கியூபெக் (Élections Québec) தேர்தல் ஆணையம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.
பொது நிறுவனங்களின் தொடர்பாடல் மொழியாகப் பிரெஞ்சு மட்டுமே இருக்க வேண்டும் என்ற சட்டக் கட்டுப்பாட்டைச் சுட்டிக்காட்டிய தேர்தல் ஆணையம், தேர்தலின் போது ஆங்கிலத்திலும் தகவல்களை அச்சிட்டு அனுப்ப அனுமதிக்குமாறு கியூபெக் மாகாண அரசிடம் கோரிக்கை விடுத்தும் அதற்கு நேர்மறையான பதில் அரசாங்கத்திடமிருந்து கிடைக்கவில்லை எனவும் தெரிவித்திருந்தது.இதன் பின்னணியிலேயே தற்போது கியூபெக் முதலமைச்சர் தரப்பு, மீண்டும் தேர்தல் ஆணையத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.
இதேவேளை, வாக்காளர் தகவல் அட்டைகள் பிரெஞ்சு மொழியில் மட்டுமே கிடைக்கும் என்ற முடிவு, கியூபெக்கில் வாழும் ஆங்கிலம் பேசும் சிறுபான்மையினரிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. வாக்குச்சாவடி விபரங்கள், வாக்களிக்கும் முறை போன்ற அத்தியாவசியத் தகவல்கள் பிரெஞ்சு மொழியில் மட்டுமே வழங்கப்படுவது, குறிப்பாக ஆங்கிலம் மட்டுமே தெரிந்த முதியவர்கள் மற்றும் தொழில்நுட்ப வசதியற்ற வாக்காளர்களைப் பெரிதும் பாதிக்கும் என ஆங்கில உரிமைகள் அமைப்புகள் கவலை வெளியிட்டுள்ளன.
இருப்பினும், தபாலில் வரும் பிரெஞ்சு மொழி ஆவணங்களில் உள்ள க்யூ.ஆர் குறியீட்டை (QR Code) ஸ்கேன் செய்வதன் மூலம் இணையதளம் வாயிலாக ஆங்கிலத் தகவல்களைப் பெற முடியும் என்றும், குறிப்பிட்ட சில தகுதியுடைய வாக்காளர்கள் நேரடியாகத் தொடர்புகொண்டு ஆங்கிலத்தில் தகவல்களைக் கோர முடியும் என்றும் தேர்தல் ஆணையம் மாற்று வழிகளை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



