கியூபெக் பிராந்தியத்தின் பிரெஞ்சு மொழிப் பாதுகாப்புச் சட்டங்களை வர்த்தகத் தடையாக (Trade Barrier) அமெரிக்கா கருதுவது கனடாவின் இறையாண்மையில் தலையிடும் செயலாகும் என்று கியூபெக் மாகாண அரசாங்கம் கண்டித்துள்ளது.
மொழி மற்றும் கலாசார உரிமைகள் எந்தவொரு வர்த்தகப் பேச்சுவார்த்தையிலும் பேச்சுவார்த்தைப் பொருளாக மாறாது என்றும் கியூபெக் மாகாண அரசாங்கம் கடுமையாகத் தெரிவித்து உள்ளது.
கனடாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே நடைபெற்று வந்த சுங்கவரி தொடர்பான பேச்சுவார்த்தைகளின் போது, கியூபெக் மாகாணத்தின் பிரெஞ்சு மொழிக் கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்த கோரிக்கையை அமெரிக்கத் தரப்பு முன்வைத்துள்ளமை பெரும் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த கியூபெக் மாகாண முதல்வர் கிறிஸ்டின் பிரேசட் (Christine Fréchette), வர்த்தகப் பேச்சுவார்த்தைகளின் போது அமெரிக்க அரசு கனடாவின் தேசிய இறையாண்மையை மீறும் எல்லை வரை சென்றுவிட்டதாகக் குற்றம்சாட்டினார்.
மின்சாதனப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் பயனர் வழிகாட்டிகளில் (User Manuals) பிரெஞ்சு மொழியைக் கட்டாயமாக்கும் கியூபெக்கின் மொழிச் சட்ட விதிமுறைகளை வர்த்தகப் பேச்சுவார்த்தைக்குள்ளே உட்படுத்த அமெரிக்கா முயன்றதாக அவர் குறிப்பிட்டார்.
“தங்களது மொழியும் கலாசாரமும் தங்களது அடையாளத்தின் மையம்.” எனவும் ”வர்த்தக அச்சுறுத்தல்கள் அல்லது வரி விதிப்புகளுக்குப் பயந்து தங்கள் மொழி உரிமைகளை ஒருபோதும் விட்டுக்கொடுக்கப் போவதில்லை” என்றும் கியூபெக் மாகாண முதல்வர் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.

