மொன்றியல் நகரில் உள்ள செயிண்ட் – மிஷேல் (St-Michel) பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வன்முறை மோதலில், கூர்மையான ஆயுதத்தால் குத்தப்பட்டு இருவர் பலத்த காயமடைந்துள்ளனர்.
இச்சம்பவத்தை அடுத்து காயமடைந்த இரு நபர்களும் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாகத் தகவலளித்த மொன்றியல் பொலிஸ் திணைக்களத்தின் (SPVM) செய்தித் தொடர்பாளர் கரோலின் செவ்ரெஃபில்ஸ் (Caroline Chèvrefils), இன்று அதிகாலையில் க்ரேமாசிபுலிவார்ட் (Crémazie Boulevard) மற்றும் முசெட் அவென்யூ (Musset Avenue) சந்திப்பில், குழு மோதல் ஒன்று இடம்பெறுவதாக தமது திணைக்களத்திற்குத் தகவல்கள் கிடைத்ததாகத் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு மொன்றியல் பொலிஸார் உடனடியாக விரைந்தபோது, உடலின் மேல் பகுதியில் தீவிர காயங்களுடன் இருவர் காணப்பட்டனர்.
பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் 20 வயதுடைய இளைஞர் என்றும், மற்றவர் 30 விளிம்பில் உள்ள ஆண் என்றும் பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர். இவர்கள் இருவரும் கூர்மையான ஆயுதம் ஒன்றினால் தாக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்த இருவரும் உடனடியாக மருத்துவ அவசர ஊர்தி (Ambulance) மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், இருவரது காயங்களும் உயிருக்கு ஆபத்தானவை அல்ல என மருத்துவ அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

