எதிர்வரும் கியூபெக் மாகாணத் தேர்தல் காலத்தில், ஆளும் தரப்பான Coalition Avenir Québec (CAQ) கட்சி, புதிய வரிக் குறைப்பு வாக்குறுதிகளை மீண்டும் வழங்காது எனத் தெரிவித்துள்ளது.
கியூபெக் மாகாணத்தின் பொருளாதார அமைச்சர் கிறிஸ்டின் பிரஷெட் (Christine Fréchette) இந்த தகவலைத் தெரிவித்துள்ளார்.
கியூபெக் மாகாணத்தின் தற்போதைய நிதி நிலைமை மற்றும் அதிகரித்து வரும் வரவுசெலவுத் திட்ட பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டு, பொறுப்பான முறையில் பொருளாதாரத்தை நிர்வகிப்பதே அரசின் முதன்மை நோக்கம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சமீபத்தில் இடம்பெற்ற ஊடகச் சந்திப்பொன்றில் உரையாற்றிய அமைச்சர் கிறிஸ்டின் பிரஷெட், முந்தைய தேர்தல் பிரச்சாரங்களின் போது அளிக்கப்பட்ட வரிக் குறைப்பு வாக்குறுதிகள் அன்றைய பொருளாதார சூழ்நிலைக்கு ஏற்ப அமைந்திருந்ததாகக் குறிப்பிட்டார்.
எனினும், தற்போதைய பொருளாதார யதார்த்த நிலைகளின் அடிப்படையில், மேலும் வரிக் குறைப்புகளை வாக்குறுதியாக அளிப்பது பொறுப்பற்ற செயலாக அமையும் என்று, அவர் தெளிவுபடுத்தினார்.
பொது நிதிப் பொறுப்புணர்வை வலியுறுத்திய அவர், மக்களின் வரிப் பணத்தை தேவையின்றி வீணடிப்பதையோ அல்லது வரவுசெலவுத் திட்டத்தின் பற்றாக்குறையை மேலும் அதிகரிப்பதையோ, ஆளும் CAQ கட்சி அரசாங்கம் விரும்புவதில்லை என்று அமைச்சர் கிறிஸ்டின் பிரஷெட் குறிப்பிட்டுள்ளார்.

