மொன்றியல் நகரில் அமைந்துள்ள ஜாரி பூங்காவில் (Jarry Park), டென்னிஸ் கனடா நிறுவனம் புதிய மைதானம் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பேரணியில் ஈடுபட்டனர்.
பொதுச் சொத்தான பூங்காவைத் தனியார் வர்த்தக நோக்கங்களுக்காகப் பயன்படுத்தக் கூடாது என்று வலியுறுத்தி மொன்றியல் மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
சுமார் 4 கிலோமீட்டர் தூரம் நடைபெற்ற இந்தப் பேரணி, தற்போதைய ஐ.ஜி.ஏ (IGA) ஸ்டேடியத்திற்கு முன்பாகத் தொடங்கி, பூங்காவைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிறைவடைந்தது.
‘பூங்கா விற்பனைக்கல்ல’, ‘இனி ஒரு அங்குலம் கூட நிலத்தை விட்டுக்கொடுக்க மாட்டோம்’ போன்ற கோஷங்களை எழுப்பியவாறு, குடும்பங்கள் மற்றும் குழந்தைகள் உட்பட ஏராளமானோர் இந்த அமைதியான போராட்டத்தில் பங்கேற்றனர்.
National Bank Open டென்னிஸ் தொடருக்காக, சர்வதேசத் தரத்திற்கு ஏற்ப, தனது வசதிகளை மேம்படுத்த டென்னிஸ் கனடா அமைப்பு திட்டமிட்டுள்ளது.
இதற்காக, ஜாரி பூங்காவில் உள்ள தற்போதைய பேஸ்போல் விளையாட்டு மைதானத்தை அகற்றிவிட்டு, 15,000 இருக்கைகள் மற்றும் மூடக்கூடிய கூரையுடன் (Retractable roof) கூடிய, புதிய டென்னிஸ் மைதானம் ஒன்றை அமைக்க அந்த அமைப்பு உத்தேசித்துள்ளது.
சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் மொன்றியலின் இடத்தைத் தக்கவைப்பதற்கு, இந்த நவீனமயமாக்கல் நடவடிக்கை அவசியம் என்று டென்னிஸ் கனடா அமைப்பு விளக்கம் அளித்துள்ளது.

