கிறிஸ்தவ அமைப்பு ஒன்றின் நிகழ்விற்கான ஒப்பந்தத்தை சட்டவிரோதமாக ரத்து செய்து, அவர்களின் கருத்துச் சுதந்திர உரிமையை மீறியதாகக் கியூபெக் மாகாண அரசுக்கும் முன்னாள் சுற்றுலாத்துறை அமைச்சர் கரோலின் புரூக்ஸ் (Caroline Proulx) அம்மையாருக்கும் கியூபெக் உயர் நீதிமன்றம் (Quebec Superior Court) 60,000 டொலருக்கும் அதிகமான அபராதத் தொகையை நஷ்டஈடாக வழங்குமாறு உத்தரவிட்டுள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியாவைத் தளமாகக் கொண்ட ‘ஹார்வெஸ்ட் மினிஸ்ட்ரீஸ் இன்டர்நேஷனல்’ (Harvest Ministries International) என்ற சுவிசேஷக் கிறிஸ்தவ அமைப்பு, கடந்த 2023 ஆம் ஆண்டு கியூபெக் நகர் மாநாட்டு மையத்தில், 10 நாட்கள் முன்னெடுக்கப்படும் மத நிகழ்வொன்றை நடத்தத் திட்டமிட்டிருந்தது.
எனினும், அந்த அமைப்பின் கருக்கலைப்புக்கு எதிரான கருத்துக்கள் கியூபெக் மாகாண அரசின் கொள்கைகளுக்கு முரணாக உள்ளதாகக் கூறி, அப்போதைய சுற்றுலாத்துறை அமைச்சரான கரோலின் புரூக்ஸ் குறித்த மாநாட்டு மையத்திற்கான வாடகை ஒப்பந்தத்தை ரத்து செய்ய உத்தரவிட்டிருந்தார்.
இவ்விவகாரம் தொடர்பாக, அந்த கிறிஸ்தவ அமைப்பு கியூபெக் மாகாண அரசுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தது.
அந்த வழக்கை விசாரித்த கியூபெக் உயர் நீதிமன்ற நீதிபதி அலேன் ட்ரூடெல் (Justice Alain Trudel), அரசு அமைப்பொன்று ஒரு குழுவின் கருத்துக்களை விரும்பவில்லை என்பதற்காக மட்டும் பொது வசதிகளைப் பயன்படுத்துவதைத் தடுக்க முடியாது எனத் தீர்ப்பளித்தார்.
” அரசுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் அல்லது பிடிக்காத கருத்துக்கள் பொதுவெளியில் பேசப்படுவதைத் தடுப்பது, கருத்துச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துவதற்கான நியாயமான காரணியாக அமையாது” என்று கூறிய கியூபெக் உயர் நீதிமன்ற நீதிபதி அலேன் ட்ரூடெல், கியூபெக்கின் முன்னாள் அமைச்சர் கரோலின் புரூக்ஸ் தனது அதிகாரத்தைத் தன்னிச்சையாகவும் தவறாகவும் பயன்படுத்தியுள்ளார்” எனக் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

