மொண்ட்ரியல் நகரில் உள்ள ‘மொண்ட்ரியல்-நோர்ட்’ (Montréal-Nord) பிராந்தியப் பொலிஸ் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள், சிறுபான்மையினக் கறுப்பின மற்றும் அரபு வம்சாவளி மக்களுக்கு எதிராகக் கொடூரமான இனவெறி மற்றும் வெறுப்புணர்வுத் தாக்குதல்களில் (Racist and hateful acts) ஈடுபட்டதாக எழுந்துள்ள முறைப்பாடுகள் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.
மொண்ட்ரியால் நகரின் 39 ஆம் இலக்க காவல் நிலையத்தைச் (Station 39) சேர்ந்த இரவு நேர சிறப்பு ரோந்துப் படை அதிகாரிகள், திட்டமிட்டு கறுப்பின மற்றும் அரபு மக்களை இலக்கு வைத்து இனவெறித் துன்புறுத்தல்களைச் செய்துள்ளதாக, உள்நாட்டுப் புலனாய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
வீதிகளில் வாகன சோதனைகள் மற்றும் விசாரணைகள் என்ற பெயரில் கறுப்பின மக்களை அநாகரிகமாக வழிமறிக்கும் இந்த அதிகாரிகள், அவர்களின் ‘டிரெட்லாக்ஸ்’ எனப்படும் பாரம்பரியத் தலைமுடியின் சில பகுதிகளைப் பலவந்தமாக வெட்டி, தங்களின் இனவெறிச் செயலின் ‘வெற்றிப் பரிசாக’ (Trophies) சட்டவிரோதமாகச் சேகரித்து வைத்துள்ளனர்.
சிறுபான்மையின மக்கள் வசிக்கும் பகுதிகளில் எந்தக் குற்றமும் செய்யாத கறுப்பின மற்றும் அரபு இளைஞர்களை நிறத்தின் அடிப்படையில் மட்டுமே பாகுபடுத்தி, அவர்களுக்கு அடுக்கடுக்கான போலிப் போக்குவரத்து அபராதங்களை (Fines) விதித்து மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளனர்.
அதே காவல் நிலையத்தில் பணிபுரியும் மற்ற சில நேர்மையான பொலிஸ் அதிகாரிகளே இந்த அநீதியைக் கண்டு சகிக்க முடியாமல், தமது உயர் அதிகாரிகளுக்கு, இந்த பிரச்சினை குறித்து இரகசியமாகத் தகவல் வழங்கியுள்ளானர்.
இதனைத் தொடர்ந்து, அந்த சிறப்பு ரோந்துப் படைப் பிரிவு உடனடியாகக் கலைக்கப்பட்டுள்ளாது.
16 பொலிஸ் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மொண்ட்ரியால் பொலிஸ் தலைமை அதிகாரி ஃபாடி டஹர் (Fady Dagher) அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இந்த வன்முறையில் நேரடியாகத் தொடர்புடைய இரண்டு அதிகாரிகள் உடனடியாகப் பணி இடைநீக்கம் (Suspended) செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் தொடர்பான ஆவணங்கள் கியூபெக் மாகாண குற்றவியல் மற்றும் தண்டனைத் துறை வழக்கறிஞர்களின் (DPCP) குற்றவியல் விசாரணைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
மீதமுள்ள 14 பொலிஸ் அதிகாரிகள் பொதுமக்களுடன் தொடர்பில்லாத வேறு பிரிவுகளுக்குத் தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


