கியூபெக் மற்றும் ஒண்டாரியோ மாகாணங்களில் விற்பனை செய்யப்பட்ட மைக்ரோகிரீன்ஸ் இளங்கீரைகளை, திரும்பப் பெற்றுக்கொள்ளுமாறு, அவற்றின் உற்பத்தி நிறுவனத்துக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கனேடிய உணவு ஆய்வு முகவரகமே (CFIA) இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
இந்த மைக்ரோகிரீன்ஸ் இளங்கீரைகள், பிரபலமானலூஃபா ஃபார்ம்ஸ் (Lufa Farms / Les Fermes Lufa) வர்த்தக நாமத்தின் கீழ், இணையவழி ஊடாக விற்கப்பட்டுள்ளன.மனித உடலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் இ-கோலை (E. coli) பக்டீரியா தொற்று இந்த மைக்ரோகிரீன்ஸ் இளங்கீரைகளில் இருக்கலாம் என்ற காரணத்தை முன்னிறுத்தியே, அவற்றைச் சந்தையிலிருந்து அவசரமாகத் திரும்பப் பெறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
லூஃபா ஃபார்ம்ஸ் என்ற வர்த்தக நாமத்துடன் விற்கப்படும் இந்த மைக்ரோகிரீன்ஸ் இளங்கீரை உணவுப் பொருட்கள் நுகர்வோரின் ஆரோக்கியத்திற்குப் பாரதூரமான அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும் என்பதால், இந்தத் தயாரிப்புகளைப் பயன்படுத்த வேண்டாம் என்று, பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இ-கோலை பக்டீரியாவால் பாதிக்கப்பட்ட உணவுப் பொருட்கள் கெட்டுப்போனதாகவோ அல்லது துர்நாற்றம் வீசுவதாகவோ காணப்படாது எனவும் அவை பார்ப்பதற்கு முற்றிலும் சாதாரண உணவுப் பொருட்கள் போலவே இருக்கும் எனவும், மத்திய உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த மைக்ரோகிரீன்ஸ் இளங்கீரைகளை உணவாகப் பரிமாறுவதோ அல்லது விநியோகிப்பதோ முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் மத்திய உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளால், பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
