நாட்டில் குடும்ப வன்முறைகள் மற்றும் நெருங்கிய நபர்களினால் நிகழ்த்தப்படும் வன்முறைகளில் இருந்து தப்பித்து, அவசரப் பாதுகாப்பைத் தேடிவரும் பெண்களுக்குத் தற்காலிகப் புகலிடங்களில் இடம் மறுக்கப்பட்டு வருவதாக, அதிர்ச்சியூட்டும் புதிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இந்தப் புகலிடங்கள், தொடர்ச்சியான நிதிப் பற்றாக்குறை, முறையான வளங்கள் இல்லாமை மற்றும் மலிவு விலை வீட்டு வசதித் தட்டுப்பாடு ஆகியவற்றின் காரணமாக, தங்களின் கொள்ளளவை மீறிச் செயல்பட்டு வருகின்றன.
இதனாலேயே, அவசரப் பாதுகாப்பைத் தேடிவரும் பெண்களுக்கு, அங்கு இடம் மறுக்கப்படும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்றக் குழு மற்றும் கனடா பெண்கள் புகலிடங்கள் அமைப்பு ஆகிய இரு வேறு உயர்மட்ட அமைப்புகள் நடத்திய புதிய தேசிய ஆய்வுகளிலேயே இவ்விவரங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
வன்முறையினால் பாதிக்கப்படும் பெண்களுக்காகவும், குழந்தைகளுக்காகவும் இயங்கும் இடைக்காலப் பராமரிப்பு இல்லங்கள் (Transition Houses) மற்றும் புகலிடங்களின் செயல்பாட்டு எல்லை குறித்தும், அவை எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் நடத்தப்பட்ட முதலாவது விரிவான தேசிய அளவிலான ஆய்வு இது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆய்வறிக்கையின்படி, கனடாவிலுள்ள தற்காலிகப் புகலிடங்களில் படுக்கை வசதிகள் மற்றும் அறைகளின் எண்ணிக்கையை விட, அதிகமான பெண்களும் குழந்தைகளும் தஞ்சமடைந்துள்ளனர்.
நாட்டில் மலிவு விலை வீடுகளின் பற்றாக்குறை காரணமாக, வன்முறையிலிருந்து தப்பி வரும் பெண்களுக்குச் செல்ல வேறு இடமில்லாத சூழல் நிலவுகிறது. ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட புகலிடங்களில், 40% சதவீதமான புகலிடங்கள் தாம் எப்போதும் முழுமையான கொள்ளளவிலேயேஇயங்குவதாகத் தெரிவித்துள்ளன.
இப்பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் நோக்கில், பாலினச் சமத்துவ அமைச்சர் மரியம் மான்செஃப் (Maryam Monsef), கனடா பெண்கள் புகலிடங்கள் அமைப்பின் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துவதற்காக சுமார் 1.5 மில்லியன் டொலர் நிதியுதவியை தற்போது அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
