அமெரிக்காவில் உள்ள முதியோர்களைத் திட்டமிட்டு ஏமாற்றி பல மில்லியன் டொலர்களை மோசடி செய்ததாகக் கைதானவர்களும் மொன்றியலைச் சேர்ந்தவர்களுமான மூன்று நபர்களுக்கு, நிபந்தனைகளுடன் கூடிய பிணை வழங்கப்பட்டுள்ளது.
இந்த மோசடியானது ‘கிராண்ட் பேரண்ட் ஸ்கேம்‘ (Grandparent Scam) என்று அழைக்கப்படுகிறது.
இந்த மோசடிச்செயற்பாட்டில், மோசடிக்காரர்கள் முதியோர்களைத் தொலைபேசியில் அழைத்து, அவர்களின் பேரன் அல்லது பேத்தி பேசுவது போல நடித்து, “நான் ஒரு விபத்தில் சிக்கி சிறையில் இருக்கிறேன், என்னைக் காப்பாற்ற அவசரமாகப் பிணைப் பணம் வேண்டும்” என்று கூறி பணம் கோருவார்கள்.
பின்னர், வழக்கறிஞர்கள் போல நடித்து முதியோர்களின் வீட்டிற்கே நேரடியாகச் சென்று ஆயிரக்கணக்கான டொலர்களை பெற்று வருவார்கள்.
இந்த மோசரி விவகாரத்தில் தொடர்புடைய எவாஞ்சலோஸ் லோஹைடிஸ், மிட்செல் பர்னெட்-குவர்னா மற்றும் கைல் லெசர் ஆகிய மூவரும் அண்மையில் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
அமெரிக்காவின் வெர்மான்ட் (Vermont) மாகாண நீதிமன்றம் இவர்களை நாடுகடத்தக் கோரியுள்ள நிலையில், தற்போது மொன்றியல் நீதிமன்றம் இவர்களுக்குப் பிணை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
