மொன்றியல் நகரில் வீடற்ற இருவர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் தமக்கு மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளித்துள்ளதாக முன்னாள் மொன்றியல் மேயர் வலேரி பிளான்ட் தெரிவித்துள்ளார். ஒரு செல்வந்த சமூகத்தில் இத்தகைய மரணங்கள் நிகழ்வது ஏற்றுக்கொள்ள முடியாதது எனக் கூறிய அவர், இப் பிரச்சினையை எதிர்கொள்ள அரசாங்கம் இன்னும் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
கடந்த சில நாட்களாக நிலவிய கடும் குளிர் காரணமாக, மொன்றியல் நகரின் மையப்பகுதி மற்றும் மெர்சியர்-ஹொச்சலாகா (Mercier-Hochelaga – Maisonneuve) பகுதிகளில் இருவர் மயங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. இவர்கள் கடும் குளிரினால் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் நிலையில், மரண விசாரணை அதிகாரியின் (Coroner) அறிக்கைக்காகப் பொலிஸார் காத்திருக்கின்றனர்.
இந்த மரணங்கள் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டியவை எனச் சுட்டிக்காட்டிய முன்னாள் மொன்றியல் மேயர் பிளான்ட், கியூபெக் மாகாண அரசாங்கத்தின் மீது தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
மொன்றியல் நகரின் வீடற்றோர் நெருக்கடி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மாகாண மற்றும் மத்திய அரசாங்கங்களின் ஒருங்கிணைந்த நடவடிக்கை மட்டுமே இதற்கு நிரந்தரத் தீர்வைத் தரும் எனச் சமூக ஆர்வலர்கள் கருதுகின்றமை குறிப்பிடத்தக்கது.
