கனடாவிற்குள் ஊடுருவியிருக்கக்கூடிய ஈரானிய உறைநிலை உளவாளிகள், நாட்டின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக அமையக்கூடும் என உளவுத்துறை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
உறைநிலை உளவாளிகள் சாதாரண பொதுமக்களைப் போலவே வேலைகளுக்குச் சென்று, சமூகத்தோடு இணைந்து வாழ்ந்து வருவார்கள் எனவும் தங்களுக்குரிய வெளிநாட்டுத் தலைவர்களிடமிருந்து கட்டளை வரும் வரை இவர்கள் எவ்விதமான சந்தேகத்திற்குரிய நடவடிக்கைகளிலும் ஈடுபடமாட்டார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவற்படை (IRGC) அமைப்பை கனடா ஏற்கனவே பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, அந்த அமைப்போடு தொடர்புடைய 24 நபர்களைக் கனடாவிலிருந்து வெளியேற்ற எல்லைப் பாதுகாப்பு முகமை (CBSA) நடவடிக்கை எடுத்து வருகின்றது.
கடந்த ஆண்டில் மட்டும் ஈரானிய உளவு அமைப்புகளால் திட்டமிடப்பட்ட பல ஆபத்தான சதித்திட்டங்களை முறியடித்துள்ளதாக, கனேடிய பாதுகாப்பு உளவுச் சேவை (CSIS)தெரிவித்துள்ளது. அமெரிக்க உளவுத்துறை அமைப்புகளும் இது குறித்து கனடாவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளன.
குறிப்பாக, ஈரானிலிருந்து அண்மையில் இடைமறிக்கப்பட்ட சில இரகசியத் தகவல்கள் (Encrypted communications), வெளிநாடுகளில் மறைந்திருக்கும் இத்தகைய உறைநிலை உளவாளி குழுக்களைச் செயற்படத் தூண்டும் சமிக்ஞைகளாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. இதன் காரணமாக கனடா மற்றும் அமெரிக்க எல்லைகளில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.


