ஒண்டாரியோ மாகாணத்தில் வீடுகளை வாங்குபவர்கள் செலுத்த வேண்டிய 13 சதவீத ஒன்றிணைந்த விற்பனை வரியை (HST) தற்காலிகமாக நீக்குவதாக, அந்த மாகாண முதல்வர் டக் ஃபோர்ட் அறிவித்துள்ளார்.
இதன் மூலம் புதிய வீடு வாங்குபவர்கள் அதிகபட்சமாக 130,000 டொலர்கள் வரை சேமிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை முதன்முறை வீடு வாங்குபவர்களுக்கு (First-time buyers) மட்டுமே வழங்கப்பட்டு வந்த இந்த வரிச் சலுகை, இனி தகுதியுள்ள அனைவருக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை, இந்த வரிச்சலுகை இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 1 ஆம் திகதி முதல் 2027 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் கையெழுத்திடப்படும் வீட்டு விற்பனை ஒப்பந்தங்களுக்கு மட்டுமே பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசுடன் இணைந்து செயல்படுத்தப்படும் இந்த 2.2 பில்லியன் டொலர் மதிப்பிலான வரிச் சலுகை திட்டம், ஒண்டாரியோ மாகாணத்தில் தற்போது முடங்கியுள்ள கட்டுமானத் துறையை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
