கியூபெக் மாகாணத்தின் முக்கிய இடதுசாரித் தலைவரும், கியூபெக் சொலிடேர் (Québec Solidaire) கட்சியின் நாடாளுமன்றத் தலைவருமான கேப்ரியல் நடோ-டுபோய் (Gabriel Nadeau-Dubois), தனது அரசியல் வாழ்க்கையில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். 2026-ஆம் ஆண்டுடன் தனது பதவிக்காலம் முடிவடைந்ததும் அரசியலிலிருந்து முற்றாக விலகிவிடப் போவதாக அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2012-ஆம் ஆண்டு கியூபெக்கில் நடந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மேப்பிள் ஸ்பிரிங் (Maple Spring) மாணவர் போராட்டங்களின் முகமாக கேப்ரியல் நடோ-டுபோய், அறியப்பட்டார்.
கடந்த 9 ஆண்டுகளாக நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றி வரும் இவர், தனது 35-வது வயதில் இந்த ஓய்வு முடிவை எடுத்துள்ளார்.
தொடர்ச்சியான அரசியல் நெருக்கடிகள் தன்னைப் பெரிதும் சோர்வடையச் செய்துள்ளதாகவும் இனி தனது நேரத்தை எனது குடும்பத்திற்காகவும், குழந்தைகளுக்காகவும் செலவிட விரும்புவதாகவும் கேப்ரியல் நடோ- டுபோய் தெரிவித்துள்ளார்.
தான் அரசியலில் இருக்கும் மீதமுள்ள காலத்தை கியூபெக்கின் சிதைந்து வரும் பொதுக் கல்வி முறையைச் சீரமைப்பதற்காகப் பயன்படுத்தப்போவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கியூபெக்கில் தனியார் பாடசாலைகளுக்கு அரசு வழங்கும் அதிகப்படியான நிதியுதவியால், பொதுப் பாடசாலைகள் தரம் குறைந்து வருவதாக கேப்ரியல் நடோ-டுபோய் குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
