மொன்றியல், வெஸ்ட் ஐலண்ட் பகுதியில் அமைந்துள்ள ‘ஜோன் அப்பொட்’ (John Abbott College) கல்லூரியில் நிலவும் “நச்சுத்தன்மை வாய்ந்த மற்றும் செயலிழந்த” பணிச்சூழலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, கல்லூரி ஆசிரியர்கள் கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதிய கல்வி ஆண்டு அதிகாரப்பூர்வமாகத் தொடங்கும் இந்தச் சூழலில், ஆசிரியர்கள் மேற்கொண்ட இந்த திடீர் போராட்டம், கல்லூரி நிர்வாகத்திற்கும் அதன் பேராசிரியர்களுக்கும் இடையிலான நீண்டகால முறுகல் நிலையை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளது.
மொன்றியல் ஜோன் அப்பொட் கல்லூரி ஆசிரியர்கள் சங்கத்தின் (JACFA-CSN) தலைவர் மரியா மஸ்தோராகோஸ் (Maria Mastorakos) வெளியிட்ட அறிக்கையில், “இந்தக் கல்வி ஆண்டின் தொடக்கம் ஒரு கறுப்பு மேகமாக அமைந்துள்ளது.” என்று குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் முதல் இக்கல்லூரியில் மனிதவளத் துறையில் (Human Resources Department) முழுநேரப் பணியாளர் எவரும் நியமிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட சமீபத்திய ஆவணங்களின்படி, கல்லூரி நிர்வாகம் ஊழியர்களிடம் பணிச்சூழல் குறித்துக் கேட்டபோது, பெரும்பான்மையானவர்கள் அதை “நச்சுத்தன்மை வாய்ந்தது” (Toxic), “அழுத்தம் நிறைந்தது” (Tense) மற்றும் “செயலிழந்தது” (Dysfunctional) என்றே வர்ணித்துள்ளனர்.
ஆசிரியர்களுக்கும் நிர்வாகத்திற்கும் இடையிலான இந்த முரண்பாடுகள், இறுதியில் மாணவர்களின் கற்றல் சூழலைப் பாதிக்கும் அபாயம் உள்ளதாகப் பேராசிரியர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

