மொன்றியல் மாநகர சபையின் செலவினங்கள் மற்றும் நிதி நிர்வாகத்தில் கடும் வீணடிப்புகளும் போதிய கண்காணிப்பின்மையும் நிலவுவதாக, அந்நகரத்தின் தலைமைக் கணக்காய்வாளர் (Auditor General) சாண்டல் கமேரா வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மொன்றியல் மாநகர சபையின் நிதியாண்டு சார்ந்த செயல்பாடுகள் மற்றும் அதிகாரிகளின் ஆடம்பரச் செலவுகள் குறித்த விரிவான கணக்காய்வு அறிக்கை அண்மையில் சமர்ப்பிக்கப்பட்டது.
மொன்றியல் நகராட்சி நிதியைப் பயன்படுத்துவதில் நிலவும் குறைபாடுகள் மற்றும் முறையற்ற முகாமைத்துவம் குறித்து இந்த அறிக்கை பல முக்கியத் தகவல்களை வெளிப்படுத்தியுள்ளது.
நகர சபையின் அதிகாரிகள் மற்றும் பிரதிநிதிகள் கலந்துகொண்ட உத்தியோகபூர்வ பயணங்களின் போது, அதிக கட்டணம் கொண்ட ஆடம்பர ஹோட்டல்களில் தங்கியமை முதன்மைப் பிரச்சினையாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நிர்ணயிக்கப்பட்ட வரம்புகளை மீறி அதிக செலவில் தங்குமிடங்கள் பதிவு செய்யப்பட்டுள்ள போதிலும், அவை தொடர்பான சரியான விளக்கங்களோ அல்லது மேல் அதிகாரிகளின் முறையான அனுமதியோ பெறப்படவில்லை என, தலைமைக் கணக்காய்வாளர் தெரிவித்துள்ளார்.
மேலும், இதுபோன்ற பயணச் செலவினங்களைக் கண்காணிப்பதற்கான அகக் கட்டுப்பாட்டு அமைப்புகள் மிகவும் பலவீனமாக இருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ள சாண்டல் கமேரா, பொதுமக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுவதைத் தடுக்க உடனடியாகக் கடுமையான நிதி விதிமுறைகள் அமல்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
ஆடம்பரச் செலவுகள் மட்டுமன்றி, மாநகர சபையால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு தகவல் தொழில்நுட்பத் திட்டங்களிலும் பெரும் நிதி முரண்பாடுகள் காணப்படுவதாக, தலைமைக் கணக்காய்வாளர் அறிக்கை தெரிவித்துள்ளது.

