மொன்றியல் (Montreal) நகரிலுள்ள அஹுன்ட்சிக்-கார்டியர்வில் (Ahuntsic-Cartierville) பகுதியில், மரக் கிளைகளை வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்த 27 வயதுடைய தொழிலாளி ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் பிரான்சிஸ் வீதியில் (Francis Street) அமைந்துள்ள ஒரு தனிப்பட்ட குடியிருப்பு வளாகத்தில் இடம்பெற்றுள்ளது.
மரக் கிளையை வெட்டிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக ஹைட்ரோ-கியூபெக் (Hydro-Québec) நிறுவனத்தின் குறைந்த மின்னழுத்த மின்சார விநியோகக் கம்பியுடன் அவர் தொடர்பிற்கு வந்ததால் கடுமையான மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளாகியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கியூபெக்கின் பணிச் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு ஆணைக்குழுவின் (CNESST) பேச்சாளர் ஃபுவாங் ஆன் ஹோ ஹூ (Phuong Anh Ho Huu) இந்த தகவலைத் தெரிவித்துள்ளார்.
உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினர், மயங்கிய நிலையில் இருந்த அவரை மீட்டதுடன், அவருக்குச் செயற்கை சுவாச சிகிச்சையும் (CPR) வழங்கினர்.
அதனைத் தொடர்ந்து அவர் தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

