கியூபெக் மாகாணத்தில் ‘கேடட்’ (Cadet) பயிற்சி மாணவர்களை ஏற்றிச் சென்ற பள்ளிப் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகி கவிழ்ந்ததில், 13 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.
அமெரிக்க எல்லைக்கு அருகிலுள்ள சௌடியர்-அப்பலாச்சஸ் (Chaudière-Appalaches) பகுதியில் நிகழ்ந்த இந்த விபத்தில் மேலும் 17 பேர் காயமடைந்துள்ளனர்.
சனிக்கிழமை காலை 8:30 மணியளவில், செயின்ட்-மேரி பகுதியிலிருந்து துப்பாக்கிச் சுடும் போட்டி ஒன்றில் பங்கேற்பதற்காக, இந்த மாணவர்கள் பேருந்தில் சென்று கொண்டிருந்தனர்.
உறைபனி மழை (Freezing rain) காரணமாகச் சாலைகள் மிகவும் வழுக்கும் தன்மையுடன் காணப்பட்டதால், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, வீதியோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 13 வயது சிறுவன் சேவியர் லாண்ட்ரி ரூசோ (Xavier Landry Rousseau) சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பேருந்து ஓட்டுநர் உட்பட 4 பேர் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் 13 மாணவர்களுக்குச் சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
